பசிபிக் ஏஞ்சல் போன்ற பயிற்சிகள், அவசரகால சூழ்நிலைகளுக்குப் பதிலளிக்கும் திறனையும், பங்குபெறும் நாடுகளிடையே நம்பிக்கையையும் வலுப்படுத்துவதாக தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற எயா வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த, மனிதனால் உருவாக்கப்பட்ட சவால்களாக இருந்தாலும், சுற்றுச்சூழல் அல்லது பாதுகாப்பு தொடர்பானவையாக இருந்தாலும், அவற்றை ஒரு நாடால் மட்டும் எதிர்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்பு செயலாளர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
உலகில் பாதுகாப்புச் சவால்கள் மிகவும் சிக்கலானவையாகவும், எல்லை தாண்டியவையாகவும் உள்ளன. இத்தகைய சூழ்நிலையில், பன்முகப் பயிற்சிகள் இராணுவங்களுக்கு இடையிலான கூட்டுறவின் தேவையை உணர்த்துகின்றன. கூட்டுத் தயார்நிலை என்பது ஒரு விருப்பத் தேர்வு அல்ல, அது ஒரு அத்தியாவசியத் தேவையாகும்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் உலகப் பாதுகாப்புக்கும், பொருளாதாரத்திற்கும் மிக முக்கியமான மையமாகத் திகழ்கிறது. கடல் வழிப் போக்குவரத்துப் பாதைகள் மற்றும் நாடுகளை இணைத்து வர்த்தகத்தைத் தக்கவைக்கின்றது.
இருப்பினும், இவை இயற்கைப் பேரிடர்கள், காலநிலை மாற்ற அபாயங்கள், எல்லை தாண்டிய குற்றங்கள் மற்றும் வளர்ந்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எளிதில் பாதிக்கப்படுகிறன.
இத்தகைய சூழலில், இந்தியப் பெருங்கடலின் இதயப் பகுதியில் அமைந்துள்ள இலங்கையின் பொறுப்பு, பிராந்தியத்தின் நிலைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் மீள்திறனை உறுதி செய்வதாகும். பசிபிக் ஏஞ்சல் போன்ற பயிற்சிகள், அவசரகால சூழ்நிலைகளுக்குப் பதிலளிக்கும் திறனையும், பங்குபெறும் நாடுகளிடையே நம்பிக்கையையும் வலுப்படுத்துகின்றன.
பசிபிக் ஏஞ்சல் 2025 பயிற்சியின் வெற்றிக்கு பங்களித்த அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், ஜப்பான் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளின் இராணுவ வீரர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றேன்.
திறன்கள் மற்றும் நடைமுறைகளுக்கு அப்பால், இந்த பயிற்சியின் உண்மையான மதிப்பு, வளர்த்த நட்புறவில் உள்ளது. இங்கு ஏற்பட்ட பரஸ்பர புரிதலும், மனிதப் பிணைப்புகளும் எதிர்கால நெருக்கடிகளின் போது பெரிதும் உதவும்.
அமெரிக்கா மற்றும் அனைத்து பிராந்திய பங்காளர்களுடனும் தொடர்ந்து ஒத்துழைப்புடன் செயல்பட இலங்கை உறுதிபூண்டுள்ளது.
மனிதனால் உருவாக்கப்பட்ட சவால்களாக இருந்தாலும், சுற்றுச்சூழல் அல்லது பாதுகாப்பு தொடர்பானவையாக இருந்தாலும், அவற்றை ஒரு நாடால் மட்டும் எதிர்கொள்ள முடியாது என்பதை நாம் உணர்ந்துள்ளோம். இணைந்து செயல்படுவதன் மூலம், பாதுகாப்பான, மீள்திறன் கொண்ட இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை உருவாக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

