ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நீக்குவதற்கான சட்ட வரைவு தயாரிக்கப்படுகிறது. யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் விரைவில் அதற்கான சட்டம் நிறைவேற்றப்படும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பலப்பிட்டிய பிரதேசத்தில் தபாலகமொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான கொள்கைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய, தேசிய வரி வருமான திணைக்களம், மதுவரி திணைக்களம், சுங்க திணைக்களம் உள்ளிட்டவை தமக்கான இலக்கிற்கு அப்பால் இலாபமீட்டியுள்ளன. மறுபுறம் அநாவசிய செலவுகளை குறைத்திருக்கின்றோம். இவற்றின் ஊடாக வரவு – செலவு திட்டத்தின் இடைவெளியை படிப்படியாக சமநிலைப்படுத்த முயற்சிக்கின்றோம்.
உலகின் பல நாடுகள் பொருளாதார வளர்ச்சியைக் காண்பிக்க தவறியுள்ள போதிலும், இலங்கை அதனை செய்து காண்பித்துள்ளதாக உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது. 2021, 2022, 2023ஆம் ஆண்டுகளில் வங்குரோத்தடைந்திருந்த நாடு இன்று இந்நிலைமையை அடைந்துள்ளது. வரவருமானம் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு செலவுகள் குறைக்கப்பட்டுள்ளன.
அதற்கமையவே, கடந்த காலங்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றக் கூடிய சட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியினர் இதற்கு வாக்களித்திருக்க முடியும்.
ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை. மாறாக இந்த விடயத்தை மறைப்பதற்காக மறுநாள் சபையில் வேறொரு விடயத்துக்காக கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். அதேபோன்று வெகுவிரைவில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நிறுத்துவதற்கான சட்டமும் நிறைவேற்றப்படும். அதற்கான சட்ட வரைபு தயாரிக்கப்பட்டு வருகிறது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

