உலகில் முதன்முறையாக ஊழலை எதிர்த்துப் போராட அல்பேனியாவில் AI அமைச்சர்

53 0

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய தீவிரமாக முயற்சித்துவரும் பால்கன் நாடான அல்பேனியா, தனது அரசாங்கத்தில் ஊழலை ஒழிப்பதற்காக, உலகில் முதல் முறையாக, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ஒரு அமைச்சரை நியமித்துள்ளது.

இந்த டிஜிட்டல் அமைச்சரின் பெயர் டியெல்லா (Diella). அல்பேனிய மொழியில் இதற்கு “சூரியன்” என்று பொருள். அல்பேனியப் பிரதமர் எடி ராமா, டியெல்லாவை “உடல்ரீதியாக இல்லாத ஒரு அமைச்சரவை உறுப்பினர்” என்று அறிமுகப்படுத்தினார். அரசாங்க ஒப்பந்தங்கள் (Public Tenders) 100 வீதம் ஊழல் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதே டியெல்லாவின் முக்கியப் பணியாகும்.

2.8 மில்லியன் மக்கள் தொகை கொண்ட அல்பேனியாவில், அரசாங்க ஒப்பந்தங்கள் வழங்குவது நீண்டகாலமாக ஊழலுக்கான ஒரு முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான அல்பேனியாவின் முயற்சிக்கு, இந்த ஊழல் ஒரு பெரிய தடையாக இருந்து வருகிறது.

நான்காவது முறையாக பிரதமர் ராமாவின் சோசலிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. 2027 ஆண்டுக்குள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தைகளை முடித்து, ஐந்து ஆண்டுகளுக்குள் அல்பேனியாவை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைக்க முடியும் என்று அந்தக் கட்சி கூறியுள்ளது.

இந்த AI அமைச்சரின் நியமனம் குறித்து சட்ட நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளதுடன், அவரது அதிகாரப்பூர்வ அந்தஸ்தை நிலைநிறுத்த மேலும் சட்டரீதியான பணிகள் தேவைப்படலாம் என்று கூறியுள்ளனர்.

அந்நாட்டு எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் காஸ்மெண்ட் பர்தி (Gazmend Bardhi), டியெல்லாவின் அமைச்சர் பதவி அரசியலமைப்புக்கு எதிரானது என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் ராமா, இந்த AI அமைச்சர் எவ்வாறு கண்காணிக்கப்படுவார் அல்லது இந்த மென்பொருள் தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயங்கள் குறித்து எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. இந்த முன்னோடி முயற்சி, எதிர்கால அரசியலில் தொழில்நுட்பத்தின் பங்கைப் பற்றிய விவாதத்தை உலக அளவில் தூண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.