உடல் பிடிப்புத் தொழிலை சட்டமாக்கும் வேலைத்திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக தேவையான ஒதுக்கீடுகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என அந்த தொழிலில் ஈடுபட்டுவரும் அனைத்து தொழிலாளர்கள் சார்பாக அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன் என இலங்கை ஸ்பா சங்கத்தின் தலைவர் பிரசன்ன முனசிங்க தெரிவித்தார்.
தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட முறையற்ற அழுத்தங்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை சமர்ப்பித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
உடல் பிடிப்பு என்ற இந்த தொழிலை சட்டமாக்குவதற்காக நாங்கள் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்து, தற்போது அதனை சட்ட மாஅதிபர் திணைக்களத்துக்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பித்திருக்கிறோம். இலங்கை மன்ற கல்லூரியுடன் இணைந்து சிகிச்சையாளர்களை பயிற்றுவிக்கும் வேலைத்திட்டத்தை தொடர்ந்து மேற்கொள்வதுடன் இதனை கொழும்பிலும் வெளி பிரதேசங்களிலும் மேற்கொண்டு வருகிறோம்.
உடல் பிடிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுவரும் அனுமதி பத்திரம் உடைய பயிற்சி பெற்றுள்ள ஊழியர்கள் இருக்கும் நிலையத்தை பொலிஸார் சுற்றிவளைப்பது சட்ட விரோதமானதாகும். இதனால் இதுதொடர்பில் எமக்கு நீதிமன்றத்துக்கு செல்வதற்கு ஏற்பட்டுள்ளது. எமது லங்கா ஸ்பா சங்கத்துடன் 1500க்கும் மேற்பட்ட நிலையங்கள் இணைந்து செயற்பட்டு வருகின்றன. இதன் மூலம் நேரடி தொழிலாக 3 இலட்சம் பேர் வரையும் மறைமுக தொழிலாக 10 இலட்சம் பேர் வரையும் இதன் மூலம் வாழ்ந்து வருகின்றனர்.
சட்டவிரோத இவ்வாறான நிலையங்கள் இருக்கலாம். அவற்றை கண்டுபிடித்து, சுற்றிவளைப்பதில் எங்களுக்கு பிரச்சினை இல்லை. விபச்சார விடுதிகளுக்கு நாங்களும் எதிர்ப்பு, சுற்றுலா கைத்தொழிலுடன் இணைந்த இந்த தொழிலுக்கு முறையான கெளரவத்தை பெற்றுக்கொண்டு நாட்டின் சட்டத்திற்கமைய செயற்படவே எமது சங்கமும் விரும்புகிறது.
அத்துடன் இந்த தொழில் அன்னியச் செலாவணியை நாட்டுக்கு பெற்றுக்கொடுக்கும் ஒரு வழியாகும். தங்களின் உடல் ஆரோக்கியத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள யாரும் விரும்புகின்றனர். அதனாலே நாங்கள் சுகாதார அமைச்சு, ஆயுர்வேத திணைக்களம், சுற்றுலா சபை மற்றும் பொலிஸ் உள்ளிட்ட ஏற்புடைய அனைத்து நிறுவனங்களையும் இணைத்து இந்த ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு வழிகாட்டியது ஜனாதிபதி காரியாலயமாகும்.
அதனால் பொய் பிரசாரங்களினால் இந்த கைத்தொழிலை வீழ்ச்சியடையச் செய்ய முடியாது. அதனால்தான் நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து இந்த பயணத்தில் இந்தளவு தூரம் வந்திருக்கிறோம் என்றார்.

