நேபாளத்தில் சமூக ஊடகத் தளங்களுக்கு அரசாங்கம் விதித்த தடை, அந்நாட்டில் பெரும் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தடைக்கு எதிராக வெடித்த போராட்டம், ஊழல் எதிர்ப்பு இயக்கமாக மாறியதைத் தொடர்ந்து, பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி ராம் சரண் பவுடலும் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
நேபாள தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் விதிமுறைகளின் கீழ் பதிவு செய்யாத இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட 26 சமூக ஊடகத் தளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்தது. இந்தத் தடை, இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்தத் தடையை எதிர்த்து ஆரம்பித்த போராட்டம், நாட்டில் நிலவும் ஊழல், பொருளாதார சமத்துவமின்மை மற்றும் அரசியல் தலைவர்கள் மீதான அதிருப்தி என விரிவடைந்தது.
பிரதமர் இல்லம், ஜனாதிபதி இல்லம், பாராளுமன்றக் கட்டிடம் மற்றும் முன்னாள், இந்நாள் அமைச்சர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
விமான நிலையம் அருகே இடம்பெற்ற போராட்டத்தால் விமான சேவை நிறுத்தப்பட்டது. பொலிஸாரின் துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறை மோதல்களில் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் காயமடைந்துள்ளனர்.
மக்களின் தொடர் போராட்டங்கள் மற்றும் வன்முறையின் காரணமாக, அந்நாட்டு உள்துறை அமைச்சர் இராஜினாமா செய்த நிலையில், இன்று பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி மற்றும் ஜனாதிபதி ராம் சரண் பவுடல் இருவரும் பதவி விலகியுள்ளனர். இந்த ராஜினாமாக்கள், நேபாள அரசியல் ஸ்திரத்தன்மையை மேலும் கேள்விக்குள்ளாக்கியுள்ளன.
இதேவேளை, நேபாளத்தின் அண்டை நாடுகளான இலங்கை மற்றும் பங்களாதேஷில் அண்மைக்காலமாக அரசியல் நெருக்கடிகள் நிலவி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான போராட்டங்களால் பங்களாதேஷில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இராஜினாமா செய்ததை அடுத்து வன்முறைகள் வெடித்தன, அதே சமயம் இலங்கையில் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து போராட்டங்கள் ஏற்பட்டு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ இராஜிநாமா செய்து நாட்டை விட்டு மாலைதீவில் தஞ்சமடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

