இந்தியாவின் 15 ஆவது துணை ஜனாதிபதியாகிறார் சி.பி. ராதாகிருஷ்ணன் !

49 0

இந்தியாவின் புதிய துணை ஜனாதிபதியாக பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் அபார வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தோல்வியடைந்தார்.

இந்திய பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்த்து 781 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். தேர்தலில் 767 வாக்குகள் பதிவாகின. இதில் 15 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. செல்லுபடியான வாக்குகள் 752. சி.பி.ராதாகிருஷ்ணன் பெற்ற வாக்குகள் 452. சுதர்சன் ரெட்டி பெற்ற வாக்குகள் 300. 152 வாக்குகள் வித்தியாசத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றார்.

துணை ஜனாதிபதியாக இருந்த ஜெக்தீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் திகதி தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, செப்டம்பர் 9ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணனும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டியும் போட்டியிட்டனர்.

தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு பெரும்பான்மையான ஆதரவு இருந்ததால் சி.பி. ராதாகிருஷ்ணனின் வெற்றி முன்னரே எதிர்பார்க்கப்பட்டது. இந்தத் தேர்தல் வெற்றி மூலம் அவர் இந்தியாவின் 15 ஆவது துணை ஜனாதிபதியாக விரைவில் பதவியேற்க உள்ளார்.

சி.பி.ராதாகிருஷ்ணன் யார்?

சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன், 1957 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் திகதி திருப்பூரில் பிறந்தார். வணிக நிர்வாகத்தில் பட்டம் பெற்றார். கல்லூரி காலத்தில், டேபிள் டென்னிஸ், கிரிக்கெட், கைப்பந்து, ஓட்டப்பந்தயம் என சகல விளையாட்டுகளிலும் சிறந்தவராக விளங்கினார்.

16 வயதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணைந்த இவர் 1974 ஆம் ஆண்டு பாரதிய ஜனசங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1996 ஆம் ஆண்டு தமிழக பா.ஜ.க. மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார். 1998 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் கோவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனார். அதன் பிறகு, 2004, 2014 மற்றும் 2019-ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் அதே தொகுதியில் தோல்வியை தழுவினார்.

எம்.பி.யாக இருந்த காலத்தில், புடவைத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராகப் பணியாற்றினார். பொதுத்துறை நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழு (பி.எஸ்.யு.) மற்றும் நிதிக்கான ஆலோசனைக் குழு ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தார். பங்குச் சந்தை ஊழலை விசாரிக்கும் நாடாளுமன்ற சிறப்புக் குழுவின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

2004-ம் ஆண்டு ஐ.நா. பொதுச் சபைக்கான நாடாளுமன்ற குழுவிலும், தாய்வானுக்கான முதல் நாடாளுமன்றக் குழுவிலும் அவர் இடம் பெற்றார். அதே ஆண்டு தமிழக பா.ஜ.க. தலைவராக பொறுப்பேற்ற பிறகு அவர் நாடு முழுவதும் நதிகளை இணைப்பது, பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவது, தீண்டாமையை முடிவுக்கு கொண்டுவருவது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி ரத யாத்திரை நடத்தினார். 2007-ம் ஆண்டு வரை 19 ஆயிரம் கி.மீ. தூரத்திற்கு 93 நாட்கள் அவர் ரத யாத்திரை சென்றுள்ளார்.

2016-ம் ஆண்டு சி.பி.ராதாகிருஷ்ணன் கொச்சியில் உள்ள கயிறு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். அந்தப் பதவியில் அவர் 4 ஆண்டுகள் இருந்தார். அப்போது, இந்தியாவில் இருந்து கயிறு ஏற்றுமதி இந்திய ரூபா மதிப்பில்.2,532 கோடி என்ற அளவுக்கு உயர்ந்தது.

2020-2022-ம் ஆண்டு காலத்தில் கேரளாவின் பா.ஜ.க. அகில இந்திய பொறுப்பாளராக பதவி வகித்தார். 2024-ம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி மராட்டிய மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பு ஜார்கண்ட் மாநில ஆளுநராக 1½ ஆண்டுகள் பதவி வகித்தார். ஜார்கண்டில் அவர் பணியாற்றிய காலத்தில், தெலுங்கானா ஆளுநர், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் ஆகிய கூடுதல் பொறுப்புகளையும் கவனித்தார்.

புதிய துணை ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஸ்பெயின், போர்த்துக்கல், நோர்வே, டென்மார்க், சுவீடன், பின்லாந்து, பெல்ஜியம், போலந்து, துருக்கி, சீனா, தாய்வான், தாய்லாந்து, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பங்களாதேஷ், இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நெருங்கிய நண்பரான சி.பி.ராதாகிருஷ்ணன், சிறுவயதில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டவர்.

இவரது தாய் ஜானகி, சி.பி.ராதாகிருஷ்ணன் பெயர் வைத்ததற்கான காரணம் குறித்து தெரிவிக்கும்போது, “எனது மகன் பிறந்தபோது, முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போல் இருக்க வேண்டும் என்று கடவுளை பிரார்த்தனை செய்து பெயரிட்டேன். அந்த தருணம் நனவாகியுள்ளது” என்றார்.