ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பியல் மனம்பேரியின் சகோதரனான சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் கார் ஒன்று இரத்தினபுரி – எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள கராஜிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை (09) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எம்பிலிப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இனந்தெரியாத நபரொருவர் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் குறித்த கராஜுக்கு சென்று சம்பத் மனம்பேரிக்கு காரை கொடுக்குமாறு கூறி அங்கு விட்டுச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
மித்தெனியவில் உள்ள காணி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, “கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 50 ஆயிரம் கிராம் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரால் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி செப்டெம்பர் 06 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் கீழ் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது “கெஹெல்பத்தர பத்மே”, “கொமாண்டோ சலிந்த” மற்றும் “பாணந்துறை நிலங்க” உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டது.
இதனையடுத்து “கெஹெல்பத்தார பத்மே” உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்து அவர்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

