ஜேர்மனியில் வாழும் தமிழர்களை சந்தித்த மு.க. ஸ்டாலின், அவர்களிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்.
ஜேர்மனியில் உள்ள தமிழ் மக்கள் ஒன்றுகூடலில் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது, ஜேர்மனியில் உள்ள தமிழ் தொழிலார்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்துள்ளார்.
சிறிய தொழில்கள் நடத்தும் மக்கள் தங்கள் வியாபாரங்களை தமிழ்நாட்டில் விரிவுபடுத்தலாம் என்றும், பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் தங்கள் நிறுவனங்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஊக்குவிக்கலாம் என்றும் கூறினார்.
மேலும், தங்கள் சொந்த கிராமங்களை கவனிக்கவும், அரசு பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவவும், தேவை உள்ளவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்கவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், தமிழ்நாடு அரசு மேற்கொண்ட உலகளாவிய முயற்சிகளை அவர் நினைவுகூர்ந்தார்.
அமீரகம், ஜப்பான், ஸ்பெயின், சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சென்றதன் மூலம் தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள் மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக தெரிவித்தார்.
2023-ல் தொடங்கப்பட்ட ‘வேர்களைத் தேடி’ திட்டத்தின் மூலம் 15 நாடுகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்கள் மூதாதையர் வாழ்ந்த இடங்களை பார்வையிட்டுள்ளதாக கூறினார்.
வெளிநாடுகளில் சிக்கிய மாணவர்களை மீட்பது, இறந்தவர்களின் உடல்களை மீட்டு அனுப்புவது, மருத்துவ மற்றும் நிதி உதவிகள் வழங்குவது போன்ற பல நலத்திட்டங்களை அரசு செயல்படுத்திவருவதாக தெரிவித்தார்.
தமிழ், தமிழ்நாடு மற்றும் தமிழ் மக்களை மறக்காதீர்கள். உங்கள் பிள்ளைகளுடன் தமிழ்நாட்டுக்கு வாருங்கள், அதன் வளர்ச்சியை பாருங்கள், அதன் வரலாற்றுக்கு பிணையுங்கள் என முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.
மேலும், வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு எப்போதும் துணையாக இருப்போம் என்றும் உறுதியளித்துள்ளார்.

