செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி பிரான்சை முடக்க பல அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அதன் பின்னணியில் வெளிநாடு ஒன்று இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.
பிரான்ஸ் அரசுக்கு சுமார் 3 ட்ரில்லியன் யூரோக்கள் அளவுக்கு கடன் உள்ளது. அரசை கடனிலிருந்து மீட்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க திட்டமிட்டுவருகிறார் பிரதமர் பிரான்சுவா பேய்ரூ (Francois Bayrou).
அரசின் கடனைக் குறைக்கும் வகையில், பணத்தை மிச்சப்படுத்துவதற்காக, இரண்டு அரசு விடுமுறைகளை குறைக்கும் திட்டம் ஒன்றை முன்வைத்தார் பேய்ரூ. ஆனால், அது பொதுமக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், சில அமைப்புகள் பட்ஜெட் தொடர்பில் பிரதமர் முன்வைத்துள்ள விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், செப்டம்பர் 10ஆம் திகதி நாடு முழுவதும் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
இந்நிலையில், செப்டம்பர் 10ஆம் திகதி பிரான்சை முடக்க திட்டமிட்டுள்ள விடயத்தின் பின்னணியில் வெளிநாடு ஒன்று இருக்கலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
அதாவது, செப்டம்பர் 10ஆம் திகதி பிரான்சை முடக்குவது தொடர்பாக, மே மாதம் 21ஆம் திகதியே Les Essentiels France என்னும் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
அதற்கு ஆதரவாக, நாளொன்றிற்கு 30,000 இடுகைகள் வரை சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவருகின்றன.
இந்த இடுகைகள், astroturfing என்னும் முறையில், போலி கணக்குகள் மூலம் தானியங்கி சாஃப்ட்வேர்கள் மூலம் பரப்பப்படுவதாகவும் அவற்றின் பின்னணியில் ஒரு வெளிநாடு இருக்கக்கூடும் என்றும், பிரான்சில் பிளவை ஏற்படுத்தும் நோக்கில் அது செயல்படலாம் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அதற்கு ஆதாரமாக பல்வேறு சமூக ஊடகக் கணக்குகளை எடுத்துக்காட்டும் அவர்கள், அவை ஒரே நாளில் உருவாக்கப்பட்டுள்ளதையும், அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் AI உதவியுடன் எழுதப்பட்டுள்ளதாக தோன்றுவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

