உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வழங்கப்பட்ட எந்தவொரு வாக்குறுதியும் அரசாங்கத்தால் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கெதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தை தவிர்ப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. இந்த விடயத்தில் சபாநாயகரின் மௌனம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் திங்கட்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வழங்கப்பட்ட எந்தவொரு வாக்குறுதியும் அரசாங்கத்தால் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
இவ்வாறான நிலைமையில் தான் தாக்குதல்கள் நடைபெற்ற போது கிழக்கு கட்டளை தளபதியாக செயற்பட்டவர் இன்று பிரதி பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிக்கின்றார்.
இதனை அடிப்படையாகக் கொண்டே சகல எதிர்க்கட்சிகளும் இணைந்து அவருக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்தன.
ஆனால் சபாநாயகரால் இதுவரை இது தொடர்பில் எந்தவொரு அறிவித்தலும் வழங்கப்படவில்லை. இது பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு புறம்பானதல்ல என சட்டமா அதிபர் சபாநாயகருக்கு அறிவித்திருக்கின்றார்.
எனவே இது குறித்த விவாதத்துக்கு பொறுத்தமான தினமொன்றை சபாநாயகரால் ஒதுக்க முடியும். இது தொடர்பில் விவாதம் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் தொடர்பில் தெரிந்து கொள்ள வேண்டிய உரிமை பொது மக்களுக்கு உண்டு.
இந்த விவகாரத்தில் சபாநாயகரின் மௌனம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நம்பிக்கையில்லா பிரேரணைக்கு அஞ்சப் போவதில்லை எனக் கூறும் அரசாங்கம் அதனை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதற்கு ஏன் தயங்குகிறது? ஜே.வி.பி.யின் தேசிய பட்டியல் வேட்பாளரே இப்ராஹிம் ஆவார்.
இப்ராஹிம்மின் பிள்ளைகள் மற்றும் மருமகள் ஆகியோரே தற்கொலை குண்டு தாக்குதல்களின் பிரதான சந்தேகநபர்களாவர். இதற்கான நிதி உதவிகளை உள்நாட்டில் அவர்களே வழங்கியிருக்கின்றனர்.
அரசாங்கம் இந்த விவாதத்தை தடுப்பதற்கு முயற்சிக்கின்றதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ஆனால் அவ்வாறு தடுப்பதற்கு அரசாங்கத்துக்கு எந்த உரிமையும் கிடையாது என்றார்.

