வெளிநாடுகளில் தொழில் செய்துவருபவர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

45 0

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடுகளுக்குச் சென்ற தொழிலாளர்களின் பிள்ளைகளின், பாடசாலைக் கல்விக்காக புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் ஒன்றை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஓர் அங்கமாக கொழும்பு மாவட்டத்தில் பதிவு செய்து வெளிநாடுகளில் தொழில் செய்துவருபவர்களின் 84 பிள்ளைகளுக்கு 2,655 மில்லியன் ரூபாய் பெறுமதியான புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (30) வெளிநாட்டு வேலையாப்பு பணியகத்தில் இடம்பெற்றது.

இதன் பிரகாரம் தரம் 5 புலமைப்பரிசில் தேர்வில் தேர்ச்சி பெற்ற 17 மாணவர்களுக்கு தலா 25,000 ரூபா பெறுமதியான புலமைப்பரிசிலுக்காக 425,000 ரூபாவும், கல்விப்பொதுத்தராதர சாதாரண தர தேர்வில் தேர்ச்சி பெற்ற 45 மாணவர்களுக்கு தலா 30,000 ரூபா பெறுமதியான புலமைப்பரிசிலுக்காக 1,350,000 ரூபாவும் உயர்தர தேர்வில் தேர்ச்சி பெற்ற 22 மாணவர்களுக்கு தலா 40,000 ரூபா பெறுமதியான புலமைப்பரிசிலுக்காக 880,000 ரூபாவும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த புலமைப்பரிசுலுக்காக விண்ணப்பங்களை அனுப்பியிருந்த 1628 புலமைப்பரிசில் விண்ணப்பதாரிகளுக்காக 50,88 மில்லியன் ரூபா பெருமதியான புலமைப்பரிசில் எதிர்வரும் தினங்களில் விநியோகிக்கப்பட இருப்பதாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1996 ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு பணியகத்தின் நலநோன்பு பிரிவினால் இதுவரை தொடர்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிப்பதற்கு மற்றும் அதுதொடர்பில் மேலதிக விபரங்களை பணியகத்தின் www.slbfe.lk என்ற வலைத்தலத்தின் ஊடாக அறிந்துகொள்ளலாம்.