பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த எந்தவொரு கட்சிக்கும் இனிவரும் தேசிய தேர்தல்களில் வெற்றி பெற முடியாது. காரணம் இவர்கள் நாட்டை நேசிப்பவர்கள் அல்ல. எதிர்காலத்திலும் தேசிய மக்கள் சக்தியே ஆட்சியமைக்கும் பட்சத்தில் பலமானதொரு எதிர்க்கட்சி உருவாக்கப்பட வேண்டும். அதனை நாம் உருவாக்குவோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.
மினுவாங்கொடை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
யுத்தத்தை வெற்றி கொண்ட உயர் இராணுவ அதிகாரிகள் அனைவரும் ராஜபக்ஷர்களால் பழிவாங்கலுக்குட்பட்டனர். சேவையிலிருந்து நீக்கப்பட்ட அவர்களுக்கு வெளியில் கூட தொழிலைத் தேடிக் கொள்ள முடியாத சூழல் அவர்களால் உருவாக்கப்பட்டது.
சரத் பொன்சேக்காவுக்கு நாட்டின் மீது பற்று இல்லை எனக் கூறுகின்றனர். நாட்டின் மீது பற்று இல்லாமலா குண்டு தாக்குதல்களுக்கு மத்தியிலும் யுத்த களத்தில் போராடினோம்?
நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கான கொள்கைகளைத் தயாரிப்பதே எமது பொறுப்பாகும். இது பாராளுமன்றத்துக்கு வெளியில் மக்களின் பங்கேற்புடன் தயாரிக்கப்பட வேண்டும்.
அரச சொத்துக்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு தம்மை பிரபலமானவர்கள் எனக் கூறிக் கொள்பவர்கள் சொகுசு வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.
இவர்களது இந்த செயற்பாடுகளால் இளைஞர் யுவதிகளுக்கு துயரம் மிக்க வாழ்க்கையை வாழ நேர்ந்துள்ளது. அதனால் தலைவர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை.
மீண்டும் எழும்ப முடியாத நிலைமைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையும் இழக்கப்பட்டால், மக்கள் மீண்டும் மாற்றத்தை தேடுவர்.
அவ்வாறு மாற்றத்தைத் தேடும் போது இந்நாட்டு மக்கள் மீண்டும் பழைய தலைவர்களையே தெரிவு செய்யப் போவதில்லை. அவ்வாறெனில் அந்த மாற்று தெரிவான புதிய சக்தியொன்று உருவாக்கப்படக் கூடும்.
தொடர்ந்தும் இந்த அரசாங்கமே காணப்படுமானால் பலமிக்க ஒரு எதிர்க்கட்சி உருவாக்கப்பட வேண்டும். கடந்த பொதுத் தேர்தலில் அந்த பிரபல கட்சிகளுக்கு என்ன ஆனது என்பது அனைவருக்கும் தெரியும்.
ஓரிரு இலட்சம் வாக்குகள் அதிகமாகக் கிடைத்துள்ளது என்பதற்காக பெருமையடைய முடியாது. கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த எந்தவொரு கட்சிக்கும் இனிவரும் தேசிய தேர்தல்களில் வெற்றி பெற முடியாது. காரணம் இவர்கள் நாட்டை நேசிப்பவர்கள் அல்ல என்றார்.

