கிளானையில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு!

85 0

மின்சார வேலியில் இருந்து மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் சனிக்கிழமை (30) உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை – தும்பளையைச் சேர்ந்த குணரத்தினம் சிவகுமார் (வயது 64) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இவர் கிளானை பகுதியில் தோட்டம் செய்கின்றார். இவர் சகோதரியின் வீட்டில் இருந்தே தோட்ட வேலைகளில் ஈடுபட்டு வருகின்றார்.

பன்றியிடம் இருந்து தனது மரவள்ளி தோட்டத்தை பாதுகாப்பதற்காக மின்சார வேலி அமைத்துள்ளார். இரவில் மாத்திரம் மின்சாரம் பாய்ச்சப்படும். காலையில் மின்சாரத்தை நிறுத்துவது வழமை.

அவருக்கு இரண்டு தோட்டங்கள் உள்ள நிலையில் மற்றைய தோட்டத்துக்கு சென்றுவிட்டு பின்னர் குறித்த தோட்டத்திற்கு வந்துள்ளார். மின்சார இணைப்பு நிறுத்தப்பட்டதாக நினைத்து வேலியில் கை வைத்தவேளை அவரை மின்சாரம் தாக்கியது. இதன்போது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.