மாகாணசபைத் தேர்தலை நடத்துங்கள் ; அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சி சவால்

48 0

அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்படுகிறது. எனவே மாகாணசபை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதாயின் இலகுவாக அதை செய்ய முடியும். எனவே விரைவில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.

கம்பஹாவில் ஞாயிறுக்கிழமை (31) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகவே நாம் ஒன்றிணைந்துள்ளோம். அதற்கு சகலரதும் ஒத்துழைப்பினைப் பெற முயற்சிக்கின்றோம். மாறாக இது அனைவரையும் இணைத்துக் கொண்டு தேர்தலில் களமிறங்குவதற்கான பயணம் அல்ல.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்ட பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளருக்கும் அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது. இதே போன்று பல்வேறு துறைகளிலும் அரசாங்கம் அடக்குமுறைகளைப் பிரயோகித்துக் கொண்டிருக்கிறது.

இந்த அடக்குமுறைகளுக்கு அரசாங்கம் பொலிஸாரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணிலின் வழக்கு விசாரணை தினத்தன்று வீதிகள் மூடப்பட்டு பொது மக்கள் நீதிமன்றத்துக்குச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. இவ்வாறான அடக்குமுறைகளுக்கு எதிராக சட்ட ரீதியாக நாம் மக்களுக்காக முன்னிற்போம். நீதிமன்றத்தை முன்னிலைப்படுத்தி பொலிஸார் அடக்குமுறைகளை பிரயோகிக்க முற்பட்டால் அதனை எதிர்கொள்ள நாம் தயாராக உள்ளோம்.

ரணில் விக்கிரமசிங்கவையே நாம் சிறையிலடைத்தோம். அவ்வாறிருக்கையில் ஏனையோரை கைது செய்வது எமக்கு கடினமான விடயமல்ல என்பதைப் போலவே அரசாங்கத்தின் செயற்பாடுகள் காணப்படுகின்றன.

எதிர்க்கட்சிகளை மௌமாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். மாகாணசபைத் தேர்தலை நடத்துவது அரசாங்கத்துக்குள்ள பாரிய சவாலாகும். பிரதேசசபைத் தேர்தலில் அரசாங்கம் பல இலட்சம் வாக்குகளை இழந்துள்ளது. இந்த அச்சத்தில் மாகாணசபைத் தேர்தல் மேலும் காலம் தாழ்த்தப்படக் கூடும்.

இந்த அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்படுகிறது. எனவே மாகாணசபை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதாயின் இலகுவாக அதை செய்ய முடியும். எனவே விரைவில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். கொள்கை ரீதியில் எம்மோடு இணையக் கூடிய அனைவரையும் இணைத்துக் கொண்டு பயணிக்க நாம் தயாராக உள்ளோம் என்றார்.