கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலுக்கமைவாக திருகோணமலை மாவட்ட சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் உலக இளைஞர் தொழில்முனைவோர் தினத்தை முன்னிட்டு இளம் தொழில் முயற்சியாளர்களை வணிகத்திற்காக ஊக்குவித்தல் தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது.
குறித்த நிகழ்ச்சியானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் வியாழக்கிழமை (21) நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உதவி பணிப்பாளர் என். பிரளாநாவன் அவர்களின் வரவேற்புரை மற்றும் அறிமுக உரையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது.
இதன்போது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திர நிகழ்நிலை மூலம் தொடர்பு கொண்டு, ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால் அந்நாட்டிலுள்ள இளைஞர் சமுதாயம் எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை கொண்ட சமுதாயமாக இருக்க வேண்டிய தேவைகள் குறித்து கருத்து தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் வழிகாட்டலில் தொழில் முயற்சியில் ஈடுபட்டு ஒரு குறிப்பிட்ட மட்டத்தை அடைந்து முன்னுதாரணமாக இருக்கும் இரு இளம் தொழில் முயற்சியாளர்களின் அனுபவப் பகிர்வும் இதன்போது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான வணிகத் துறை தொடர்பான அரச நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து மிகவும் தெளிவாக துறைசார்ந்த அதிகாரிகளால் கலந்துரையாடப்பட்டன.
இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், வங்கி உயரதிகாரிகள், துறைசார்ந்த அதிகாரிகள் மற்றும் இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.




