உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (WADA) ஏற்பாடு செய்யும் எந்தவொரு நிகழ்விற்கும் அனுசரணை வழங்குவதற்கோ அல்லது எந்தவொரு அதிகாரப்பூர்வ பதவியையும் வகிப்பதற்கோ இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று (20) முதல் அமுலாகும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
உலக ஊக்கமருந்து எதிர்ப்பு விதிகளின்படி இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் செயற்படவில்லை என அறிக்கை ஒன்றை வெளியிட்டு WADA தெரிவித்துள்ளது.
உலக ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பின் சுயாதீன இணக்க மறுஆய்வுக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கண்காணிக்கப்பட வேண்டிய நாடுகளின் பட்டியலில் இலங்கை சேர்க்கப்பட்டது.
இருப்பினும், ஜூன் 29 ஆம் திகதி கண்காணிப்பு காலம் முடிவடையும் வரை, உலக சட்ட அமைப்பில் தேவையான திருத்தங்களைச் செய்ய இலங்கை தவறிவிட்டதாக WADA தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக, நாட்டின் ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனத்தை, உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனத்துடன் இணங்காத ஒரு நிறுவனமாக பெயரிட அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன் விளைவாக, உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட திட்டங்களில் இலங்கை பங்கேற்க அனுமதிக்கப்படாததுடன், நிதியுதவியும் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
மேலும், இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் உலக சட்ட அமைப்பில் தேவையான திருத்தங்களை ஒரு வருடத்திற்கும் மேலாக தாமதப்படுத்தினால், பிராந்திய, கண்ட அல்லது உலக செம்பியன்ஷிப் போட்டிகளிலும், ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் உட்பட பல முக்கிய போட்டிகளிலும் சிங்கக் கொடியின் கீழ் போட்டியிட இலங்கைக்கு வாய்ப்பு கிடைக்காது.
இலங்கைக்கு மேலதிமாக ரஷ்யாவிற்கும் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

