இந்திய சுதந்திர தின விளம்பரங்கள் தொடர்பில் ஐ.தே.க அதிருப்தி

60 0

இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கையின் அச்சு ஊடகங்களில் வெளியிடப்பட்ட மேலதிக விளம்பரங்கள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் மட்ட அதிகாரிகளின் கூட்டத்தில் மிகுந்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் தயாரிக்கப்பட்டு அச்சு ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட விளம்பர இணைப்பில் உள்ள புகைப்படங்களின் தேர்வு மற்றும் பயன்பாடு குறித்து அந்த கூட்டத்தின் போது விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

மேலதிகமாக அனுப்பப்படும் விளம்பர பக்கங்கள் அனைத்திலும் இந்திய பிரதமர் மற்றும் இலங்கை ஜனாதிபதிகள் சேர்ந்திருக்கும் படங்கள் வழமையாக பயன்படுத்தப் படமாட்டாது என அந்த கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் இராஜதாந்திரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேநேரம், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் படமோ அல்லது குறிப்போ அதில் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் மேற்பார்வையின் கீழ் வெளியிடப்பட்ட விளம்பரங்கள் தொடர்பான தமது அதிருப்தியை ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.