சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் சகல சனிக்கிழமைகளிலும் கண்டி நகர் ஶ்ரீ தலதா வீதி மற்றும் கொட்டுகொடெல்ல வீதி என்பவற்றில் பரீட்சாத்த அடிப்படையில் எதிர்வரும் 16,23, மற்றும் 30ம் திகதிகளில் இரவுச் சந்தைகளை (நைட் பஸார்) அமைக்க மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கண்டியிலுள்ள ஆளுநர் காரியாலயத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் இது எதிர்வரும் காலங்களில் சகல சனிக்கிழமைகளிலும் பி.ப.7.00 மணி முதல் நல்லிரவு 12.00 மணிவரை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சுற்றுலாப் பயணிகளை கண்டி நகரில் தொடர்ந்து தங்க வைக்கும் ஒரு யுத்தியாகவும் இது திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவ்வாறு அவர்களை கண்டி நகரத்தில் தங்கவைத்துக் கொள்வதால் ஹோட்டல் அறைகளுக்கு நல்ல கேள்வி ஏற்படும் வாய்ப்புக்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதற்காக உயர்தரத்தில் தயாரிக்கப்பட்ட உள்ளூர் உணவு வகைகள், களியாட்ட விளையாட்டுக்கள், கைப்பணிப் பொருற்கள் கண்காட்சி மற்றும் விற்பனை, இசைக்கச்சேரிகள், மற்றும் நல்லிரவு வரையான போக்குவரத்து வசதிகள் முதலான அடிப்படை வசதிகள் பலவற்றை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பரீட்சாத்த கால நடவடிக்கையாக 50 வர்த்தக நிலையங்களை அமைக்க இலவசமான வசதிகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
இவ்வைபவத்தில் கண்டி மாநகர பிதா சந்திரசிரி விஜேநாயக்கா, பிரதி நகர பிதா ருவன் குமார, மத்திய மாகாண முதலீட்டு சபையின் செயலாளர் எம்.வை.ஏ.அஹமட் ஆகியோரும் கருத்து வெளியிட்டனர்.

