இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சிறைச்சாலை சுகாதார சேவையின் முன்னாள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ரணசிங்க ஆராச்சிகே ஹேமந்த ரணசிங்கவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (13) உத்தரவிட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவர் சுகயீனமடைந்து வெலிக்கடை சிறைச்சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சையளிப்பதற்கு 15 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரப்பட்டுள்ளது.
இந்த 15 இலட்சம் ரூபாவில் முதற்கட்டமாக 3 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக்கொண்ட சிறைச்சாலை சுகாதார சேவையின் முன்னாள் பிரதி பணிப்பாளரும் சிறைச்சாலை சுகாதார சேவையின் அங்கொடை தேசிய மனநல நிறுவனத்தின் தற்போதைய பதில் பணிப்பாளராக கடமையாற்றும் வைத்தியர் ரணசிங்க ஆராச்சிகே ஹேமந்த ரணசிங்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்றைய தினம் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

