நாட்டில் கைதிகளுக்கான சுகாதாரப் பராமரிப்பு என்பது ஒரு சலுகை அல்ல, மாறாக ஒரு உரிமையாகும், மேலும் மன அழுத்தம் மற்றும் பணி நெருக்கடி மற்றும் போதுமான ஊழியர்கள் இல்லாமை போன்ற மன அழுத்தம் நிறைந்த சுற்றுச்சூழல் நிலைமைகளும் சிறைச்சாலைகளில் தொற்றா நோய்கள் அதிகரிப்பதற்கு பங்களிக்கும் காரணிகளாகும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நாட்டில் நிறுவப்பட்ட 24 சிறைச்சாலை மருத்துவமனைகளில் சிறை அதிகாரிகள், கைதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக செயல்படுத்தப்படும் சிறப்பு மருத்துவ சிகிச்சைத் திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,
சிறைச்சாலை மருத்துவமனைகளில் மருத்துவர்கள் உட்பட தேவையான சுகாதார ஊழியர்கள் விரைவில் இணைக்கப்படுவார்கள். சிறைச்சாலை மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவுகளை நிறுவ திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. சிறைச்சாலை மருத்துவமனைகளின் மகளிர் விடுதிகளில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க அவசர நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது நாட்டில் சுகாதாரத் துறை எதிர்கொள்ளும் முக்கிய சவால் தொற்றா நோய்களாகும். கடந்த காலத்திலிருந்தே தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நமது நாடு ஒரு முன்மாதிரியாக இருந்து வருகிறது. நாட்டில் சுகாதார அமைப்பு தொற்று மற்றும் தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தவும் இல்லாதொழிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகளால் தொற்றா நோய்கள் அதிகரித்துள்ளன என்பதை வலியுறுத்தப்பட்டது.
இலங்கையின் நீரிழிவு நோயாளிகளில் 21 சதவீதத்தினர் மட்டுமே தொடர்ந்து நோயைக் கட்டுப்படுத்த சிகிச்சை பெறுகிறார்கள். உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சதவீதம் சுமார் 25 சதவீதம் பேர் காணப்படுகின்றனர்.
நோய் கட்டுப்பாட்டில் தொடர்ச்சியான சிகிச்சை மிகவும் முக்கியமானது. சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் அறிக்கைகளின்படி, கணிசமான எண்ணிக்கையிலான பெண்கள் இந்த நோய்க்காக பரிசோதிக்கப்படுகிறார்கள் பொது சேவையில் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர், அதாவது 40 சதவீதமானோர் காவல் துறையில் உள்ளனர் . செயலில் ஈடுபடும் போது தொற்றா நோய்களால் ஏற்படும் இறப்புகளில் அதிக எண்ணிக்கை காவல்துறை சேவையில் இருக்கின்றனர்.
சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளுக்கு உகந்த சுகாதார சேவையை வழங்கும் பொறுப்பை சுகாதார அமைச்சகம் ஏற்றுக்கொள்கிறது. நாட்டில் ஒரு பெரிய சுகாதார சவாலாக மாறியுள்ள தொற்றா நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சைக்காக பரிந்துரைப்பது இந்த சுகாதார திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் என்றார்.



