யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா 2025!

69 0

யாழ்ப்பாண வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தின் ஏற்பாட்டில், இரண்டாவது ‘யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா 2025’ ஆனது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை மூன்று தினங்களுக்கு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு ஒன்று திங்கட்கிழமை (11) யாழ்ப்பாண வர்த்தகத் தொழிற்துறை மன்ற அலுவலகத்தில் இடம்பெற்றது. அப்போது ஏற்பாட்டாளர்கள் இதனைத் தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில், “நமது சமூகத்தில் வாசிப்பு கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் சமூகப் பொறுப்பு நமக்கு உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வாசிப்பை மேம்படுத்தும் நோக்கில், இந்தப் புத்தகத் திருவிழாவை இலாப நோக்கமின்றிக் கடந்த ஆண்டு சிறப்பாக நடத்தினோம். அதற்கு கிடைத்த பெரும் வரவேற்பே இந்த ஆண்டும் சிறப்பாக ஏற்பாடு செய்ய எங்களை ஊக்குவித்தது” என்றனர்.

உள்நாட்டு, தேசிய மற்றும் சர்வதேச புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றிணைத்து நடைபெறும் இந்தத் திருவிழாவில், வாசகர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நூலகர்கள் என அனைவரும் ஒரே இடத்தில் பன்மொழிப் பதிப்பகங்களைக் காணவும், தள்ளுபடி விலையில் புத்தகங்களை வாங்கவும் வாய்ப்பு கிடைக்கும். அத்துடன், பிரபல எழுத்தாளர்களைச் சந்தித்துப் பேசவும், புத்தக வெளியீடுகளில் பங்குபெறவும், நாடக நிகழ்வுகளைக் காணவும் ஒரு அரிய சந்தர்ப்பம் கிடைக்கும்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை புத்தகத் திருவிழாவை ஆரம்பித்து வைப்பதற்காக, பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் மற்றும் சிறப்பு விருந்தினராக மூத்த எழுத்தாளர் கோகிலா மகேந்திரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

மூன்று தினங்களும் புத்தகக் கண்காட்சிக்கு அப்பால் பல்வேறு கலை மற்றும் இலக்கிய நிகழ்வுகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.