பல வருடங்களாக இழுபறி நிலையில் காணப்படும் சவூதி அரசாங்கத்தின் நிதியில் அக்கரைப்பற்றில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுனாமி வீடுகளை பகிர்ந்தளிப்பது தொடர்பில் பாராளுமன்ற குழு ஒன்றை நியமித்து உரிய நடவடிக்கை எடுக்க முடியும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (06) காதர் மஸ்தான் எம்பி பிரதமரிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
2004 டிசம்பர் 26 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது வீடுகளை இழந்த அம்பாறை மாவட்ட மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக சவூதி அரேபிய அரசாங்கத்தின் சல்மான் மன்னரின் மனிதாபிமான உதவியில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 500 வீடுகளுடன் வீட்டுத் திட்டம் நிர்மாணிக்கப்பட்டது.
அம்பாறை தீகவாபி ரஜ மஹா விகாரைக்கு அருகாமையில் இந்த வீட்டுத் திட்டம் அமைந்துள்ளதால் எல்லாவல மேதானந்த தேரர் உள்ளிட்ட தரப்பினர் அது தொடர்பில் நீதிமன்றத்தின் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
அப்பகுதியில் முஸ்லிம் மக்களை குடியேற்றுவதானது பௌத்த மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயலாகும் என தெரிவித்து 2008, மார்ச்,31ஆம் திகதி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேற்படி அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் பயனாளிகளுக்கு வீடுகளை பகிர்ந்தளிப்பதை நிறுத்த நேர்ந்தது.
அந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட உயர் நீதிமன்றம், 2009 ஆம் ஆண்டு ஜூன் முதலாம் திகதி தீர்ப்பு வழங்கியது. அதில் அரசாங்கத்தின் காணி மக்களுக்கு வழங்கும்போது அது சட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு மாத்திரமே வழங்க முடியும் என்றும் சட்டத்துக்கு அப்பால் எதையும் செய்ய முடியாது என்றும் தீர்மானித்தது.
அந்த வகையில் அரசாங்கத்தினால் தேசிய இன விகிதாசார அடிப்படையில் இந்த பகிர்ந்தளிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற தீர்ப்பினால் இதுவரை காலமும் அந்த 500 வீடுகள் பகிர்ந்தளிக்கப்படாத நிலையில் காணப்படுகின்றன. அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அது தொடர்பில் தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதன்படி அம்பாறை மாவட்டத்தில் வசிக்கும் மக்களின் இன விகிதாசாரப்படி இந்த வீடுகள் பகிர்ந்தளிக்கப்படுவது பொருத்தமானது என அங்கு தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி 2012 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீட்டின் படி பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்கள் அடிப்படையில் அந்த மாவட்டத்தின் இன விகிதாசார அடிப்படையில் அந்த 500 வீடுகளையும் பகிர்ந்தளிப்பதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கினால் அதனை நடைமுறைப்படுத்த முடியும்.
அந்த வகையில் அந்த மாவட்டத்தின் 38. 9 சதவீத சிங்கள மக்களுக்காக 95 வீடுகளும் 43. 4 சதவீத முஸ்லிம் மக்களுக்காக 270 வீடுகளும் 17.4 சதவீத தமிழ் மக்களுக்காக 87 வீடுகளும் ஏனைய இன பிரிவினருக்கு ஒரு வீடும் என வழங்க முடியும் என உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இணங்க தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை இதற்கு முன்னரும் இந்த விடயம் தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இந்த எல்லா சந்தர்ப்பங்களிலுமே உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமையவே செயற்பட வேண்டும் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன் பின்னர் சட்டமா அதிபரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ள கலந்துரையாடலின் போது மேற்படி குடிசன மதிப்பீட்டு தகவல்களுக்கு இணங்க இன விகிதாசார அடிப்படையில் அந்த வீடுகளை வழங்குவது பொருத்தமானது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

