பத்மேவின் போதைப்பொருள் வலையமைப்பை நடத்தும் வலஸ் கட்டா கைது

43 0

நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கெஹல்பத்தர பத்மேவின் போதைப்பொருள் வலையமைப்பை நடத்தி வரும் திலின சம்பத் எனப்படும் ‘வலஸ் கட்டா’ மேற்கு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய உதவியாளரான ‘பஸ் தேவா’ (கம்பாஹா தேவா) என்பவரால் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

சீதுவ பகுதியில் மோட்டார் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது ‘வலஸ் கட்டா’ கைது செய்யப்பட்டார். மேலும் இதன்போது நடத்தப்பட்ட சோதனையின் போது, மோட்டார் வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 550 கிராம் ஹெரோயினையும் பொலிஸர் கண்டுபிடித்தனர்.

அவர் கணேமுல்ல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர்.

சந்தேக நபரின் கையடக்கத் தொலைபேசியை சோதனைக்கு உட்படுத்திய போது, அவருக்கு கமாண்டோ சலிந்தா மற்றும் கெஹல்பத்தர பத்மே ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்ததாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக வலஸ் கட்டாவுக்கும் கெஹல்பத்தர பத்மேவுக்கும் இடையே நடந்த உரையாடலின் குரல் பதிவையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கம்பஹா ஒஸ்மன் என்பவரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக சந்தேகிக்கப்படும் குரல் பதிவு ஒன்றையும் சந்தேகநபரின் கையடக்க தொலைபேசியில் இருந்து பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இதற்கிடையில், தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் பஸ் தேவாவிடம் இருந்த ஒரு சிறிய புத்தகத்தை சோதனையிட்டதில் பல்வேறு முக்கிய தகவல்களை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

அதில் தடுகம பகுதியில் வசிக்கும் இரண்டு பெண்கள் மற்றும் ஆணொருவரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

பத்மேவின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, ஹீனடியன சங்கவின் அறிவுறுத்தலின் பேரில் அவர்கள் மூவரும் மோட்டார் சைக்கிளை வழங்கியதாக தெரியவந்துள்ளது.

மூவரின் பெயர் பற்றிய தகவல்களை பத்மேவுக்கு வழங்குவதன் மூலம் அவர்களைக் கொல்ல ஒரு திட்டம் இருந்ததாகவும் விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கு வடக்கு குற்றப்பிரிவின் பணிப்பாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகலவின் மேற்பார்வையில் பிரதான பொலிஸ் பரிசோதகர் லிண்டன் சில்வா மேற்கொண்டு வருகிறார்.

இதேவேளை, கெஹெல்பத்தர பத்மேவிடம் இருந்து அச்சுறுத்தல் வந்துள்ள மேற்கு வடக்கு குற்றப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லிண்டன் சில்வா லிண்டன் சில்வாவுக்கு விசேட பாதுகாப்பு வழங்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

லிண்டன் டி சில்வாவுக்கு சமீபத்தில் கெஹல்பத்தர பத்மே என்று கூறி தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்கள் வந்தன.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நேற்று (5) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.

பொலிஸாரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், கெஹல்பத்தர பத்மே உட்பட மூன்று நபர்களின் தொலைபேசி பதிவுகள் தொடர்பிலா அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது