கல்கிஸ்ஸையில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

42 0

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அரலிய பிரதேசத்தில் கடந்த 01 ஆம் திகதி கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (05) பிற்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞன் ஆவார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கல்கிஸ்ஸை – அரலிய பிரதேசத்திற்கு கடந்த 01 ஆம் திகதி சென்ற கும்பல் ஒன்று இரண்டு நபர்களை கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கல்கிஸ்ஸை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் மொரட்டுவை ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து திங்கட்கிழமை (04) இரவு கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் மொரட்டுவை பிரதேசத்தில் வைத்து நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து துப்பாக்கி மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.