விசா காலம் முடிந்த பின்னரும் நாட்டில் தங்கியிருப்போர் மற்றும் கடவுச்சீட்டு ஆவண மோசடி தொடர்பில் இதுவரை 219 வெளிநாட்டுப் பிரஜைகளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கைது செய்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில், சுசந்த குமார நவரத்ன எம்பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமது விசா காலம் முடிவடைந்துள்ள நிலையிலும் நாட்டில் தங்கியுள்ள நபர்கள் தொடர்பில் தொடர்ந்தும் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குடிவரவு,குடியகல்வு சட்டத்தின்படி அவ்வாறு தங்கியுள்ளவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கான பணிப்புரைகள் மேற்படி திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களாக பொலிஸ் துறை, குடிவரவு,குடியகல்வு திணைக்களம், அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபை, அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான செயலகம், தேசிய பொலிஸ் பயிற்சி நிலையம் ஆகியன காணப்படுகின்றன.
அந்த வகையில் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் மேற்படி நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளின் எண்ணிக்கை ஸ்ரீலங்கா பொலிஸ் 28, குடிவரவு, குடியகல்வு திணைக்களம்149,
அந்த வகையில் பொலிஸ் துறையானது துப்பாக்கிகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மனித படுகொலைகள், ஆயுதங்களைப் பயன்படுத்தி தடை செய்யப்பட்ட விலங்குகளை வேட்டையாடுதல் ஆகியவை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்கிறது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களமானது விசா காலம் முடிந்த பின்னும் நாட்டில் தங்கியிருப்போர் தொடர்பில் மற்றும் விசா நிபந்தனைகளுக்கு முரணான வகையில் நாட்டுக்கு வருவோர், கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளுக்காக தவறான ஆவணங்களை வழங்குவோர் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
அந்த வகையில் பொலிசார் மனித படுகொலைகள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 241, காயங்களுக்குள்ளானோர் தொடர்பான விசாரணைகளில் கைதுசெய்யப்பட்டோர் 180 பேர், தடை செய்யப்பட்ட விலங்குகளை வேட்டையாடிய குற்றம் தொடர்பில் 4 பேர் என மொத்தமாக 425 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களமானது வியட்நாம் பிரஜைகள் 23 பேரை கைது செய்துள்ளதுடன் இரண்டு பாகிஸ்தான் பிரஜைகள், 106 பங்களாதேஷ் பிரஜைகள், 56 இந்தியர்கள், 4 சீனப் பிரஜைகள் 6 தாய்லாந்து பிரஜைகள், 2 பிலிப்பைன்ஸ் பிரஜைகள், பிருந்தி 2 , கென்யா 2,ஒரு எத்தியோப்பியப் பிரஜை, ஒரு உகண்டா பிரஜை, ஒரு நேபாள பிரஜை , மூன்று ரஷ்ய பிரஜைகள், ஒரு நெதர்லாந்து பிரஜை, இரண்டு யேமன் பிரஜை, இஸ்ரேல் நான்கு பிரஜைகள் , அவுஸ்திரேலியா 1, இத்தாலி ஒன்று, சூடான் ஒன்று என 219 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் பொலிஸ் துறையில் மனித படுகொலைகள் தொடர்பில் 23 பல்வேறு ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றார்.

