பிரான்சில் அரசு வழங்கும் ஸ்காலர்ஷிப் உதவியுடன் கல்வி கற்க வந்த காசா மாணவி ஒருவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
ஹமாஸ் இஸ்ரேல் மோதலைத் தொடர்ந்து, பிரான்ஸ் அரசு, காசாவிலிருக்கும் சுமார் 500 பேரை அங்கிருந்து பத்திரமாக மீட்டு வர உதவியுள்ளது.
ஆனால், காசா மாணவி ஒருவர், சமூக ஊடகத்தில் வெளியிட்ட சில செய்திகள், அவருக்கு மட்டுமின்றி பிரான்ஸ் உதவத் தயாராக இருந்த மற்ற பல காசா மாணவ மாணவிகளுக்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
நூர் அத்தாலா (Ms. Nour Attaalah, 25) என்னும் அந்த மாணவி, ஜூலை மாதம் 11ஆம் திகதி பிரான்ஸ் வந்தடைந்தார்.
காசா மாணவ மாணவியருக்கு பிரான்சில் கல்வி கற்பதற்காக வழங்கப்படும் ஸ்காலர்ஷிப் மற்றும் மாணவர் விசாவில் அவர் பிரான்ஸ் வந்திருந்தார்.
நூர் பிரான்சிலுள்ள Sciences Po Lille பல்கலையில் சேர இருந்த நிலையில், அவர் சமூக ஊடகங்களில் யூதர்களுக்கு எதிரான மோசமான கருத்துக்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியிட்டுவந்தது தெரியவந்தது.

அது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரான்ஸ் வெளியுறவு அமைச்சரான ஜீன் நோயல் பாரட் (Jean-Noel Barrot), காசா மாணவியான நூர் தெரிவித்துள்ள கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள இயலாதவை என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இனி நூர் பிரான்சிலிருக்க முடியாது என்றும், அவர் நேற்று, அதாவது, ஞாயிற்றுக்கிழமை பிரான்சிலிருந்து வெளியேறி கத்தார் நாட்டுக்குச் சென்றுவிட்டதாகவும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மோசமான விடயம் என்னவென்றால், நூர் உருவாக்கிய பிரச்சினையால், காசாவிலிருந்து மாணவ மாணவியரை வெளிக்கொண்டுவரும் திட்டங்களை நிறுத்துவதாக பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.

