மட்டக்களப்பில் 90 மில்லியன் ஊழல்? அரசாங்க அதிபரை விசாரிக்க வேண்டும்!

432 0

IMG_0010மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ள நிவாரணப் பணிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 90 மில்லியன் ரூபாய் பணம் தேர்தலுக்காக பாவிக்கப்பட்டதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது.

எனவே அரசாங்க அதிபரை அரசாங்கம் விசாரிக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் மாசிலாமணி அவர்கள் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய நிலை குறித்து ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்

மகிந்த ராஜபக்ச ஆட்சியில் மட்டக்களப்பில் வெள்ளம் ஏற்பட்ட பொழுது புனர்வாழ்வு அமைச்சினால் 90 மில்லியன் ரூபாய் காசு கச்சேரிக்கு அனுப்பப்பட்டிருந்தது.

இந்த 90 மில்லியன் ரூபாய் காசுக்கும் செலவு செய்யப்பட்டதாக பற்றுச்சீட்டுக்களை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் அதனை காசாக மகிந்த ராஜபக்சவின் தேர்தல் செலவுகளுக்காக வெளியில் உள்ளவர்களுக்கு கொடுத்துள்ளார்.

இந்தப்பணம் செலவு செய்யப்பட்டதாக பிரதேச செயலாளர்களிடம் பற்றுச்சீட்டை கோரியிருந்த போது பற்றுச்சீட்டுக்களை வழங்க மறுத்த பிரதேச செயலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டம் வறுமையில் உள்ளது என்று சொல்வதற்கு அரசாங்க அதிபருக்கு அருகதையில்லை.

முதலில் தன்மீது உள்ள குற்றச்சாட்டுக்களை அவர் தெளிவுபடுத்தவேண்டும். 90 மில்லியன் காசுக்கு என்ன நடந்தது என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

பற்றுச்சீட்டை வேண்டி இவர் கட்டியிருந்தாலும் அந்த பற்றுச்சீட்டிற்கு ஏற்ப அந்த 90 மில்லியன் ரூபாயும் மக்களுக்கு செலவு செய்யப்படவில்லை.

அதாவது புனர்வாழ்வு அமைச்சினால் மக்களின் வெள்ள நிவாரணத்திற்கு வழங்கப்பட்ட 90 மில்லியன் ரூபாயும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செலவு செய்யப்படவில்லை என்பதற்கான ஆதாரம் எங்களிடம் உண்டு.

90 மில்லியன் ரூபாய் பணமும் தேர்தல் பிரச்சாரத்திற்கு பாவிக்கப்பட்டதற்கான ஆதாரம் எங்களிடம் உண்டு. இது பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் விசாரணை செய்யப்படவேண்டும்.

புனர்வாழ்வுக்கு அனுப்பிய பணத்தையே மக்களுக்கு வழங்காது அரசியலுக்கு செலவுசெய்த மாவட்ட நிர்வாகத்தை எவ்வாறு மக்கள் நம்புவது.

காணி அதிகாரங்கள் அனைத்தும் கச்சேரிக்கே உண்டு பிரதேச செயலாளர்களை மீறி பல காணிகள் கச்சேரியினால் வழங்கப்பட்ட சம்பவங்கள் உண்டு.

இதைப்பற்றி நான் பேசினால் அரசாங்க அதிபர் எனக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம். ஏனெனில் தனக்கு பொறுத்தமில்லாமல் வருகின்ற எல்லாவற்றிற்கும் இவர் நடவடிக்கை எடுப்பது வழமையாக கொண்டுள்ளார்.

நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்பட்ட 90 மில்லியன் ரூபாய் காசுக்கும் என்ன நடந்தது என்பது பற்றி இந்த அரசாங்கம் விசாரணை செய்யாமல் நடவடிக்கை எடுக்காது உள்ளமை எமக்கு கேள்வி அடையாளமாக உள்ளது.

இவர் தற்போது தன்னை மாற்றினால் தனது பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படும் என்ற காரணத்தை முன்வைக்கிறார்.

ஆனால் ஏனைய பிரதேச செயலாளர்களை இவர் இடமாற்றம் செய்யும்போது அவர்களின் குடும்பங்களும் பாதிக்கப்படும் என்பதை இவர் சிந்திக்க மறந்துவிட்டார்.

என்னைப் பொறுத்தவரை இவர் மட்டக்களப்பில் இருந்து மாற்றப்படவேண்டும்.

மட்டக்களப்பிற்கு விமோட்சனம் வேண்டுமாக இருந்தால் அரசாங்க அதிபர் மாவட்ட நிர்வாகத்தை உடனடியாக மாற்றப்படவேண்டும்.

அரசாங்க அதிபரை மாற்றிவிட்டு அவர் மீதான விசாரணைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

இடமாற்றத்திற்கு தடையாக இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்க அதிபரிரை பாதுகாப்பதற்காக எமது காவல் தெய்வங்கள் சில தடையாகவுள்ளன.

உதாரணமாக மாவட்டத்தின் காணிப்பிரச்சினையில் இவர் தலையிடுகிறார் அவர் தடுக்கவில்லை என்று கூறி தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிக்கை விடுகின்றதே தவிர அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.

சமூகவலைத்தளங்களில் அறிக்கைவிடுவதை விட நேரடியாக அவரை இடமாற்றச்சொல்லி கேட்கவில்லை.

கேட்டாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை அவர் கொஞ்சநாள் இருக்கட்டும் என சொல்லியிருப்பதாக தகவல் இருக்கின்றது.

கொஞ்சநாள் இருக்கட்டும் என்று அவர்கள் தனிப்பட்ட ரீதியாக சொன்னாலும் அந்த கொஞ்சநாளும் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான்.

ஆகவே இது குறித்து இனி பொதுமக்கள்தான் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்கின்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது எனது கருத்து என கூறியதுடன் இன்னும் பல கருத்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.