பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நீக்கும் யோசனைக்கு பலரும் எதிர்ப்பு – சுஜித் சஞ்சய் பெரேரா

53 0

முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியத்தை நீக்குவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தன் பின்னரே அது குறித்த தெளிவினைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நீக்கும் யோசனைக்கு பலரும் எதிர்ப்பினைத் தெரிவிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் திங்கட்கிழமை (4) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முன்னாள் ஜனாதிபதிகளின் சகல சிறப்புரிமைகளையும் நீக்குவதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியமும் இரத்து செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்படவுள்ளதா அல்லது எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படுமா என்பது எமக்குத் தெரியாது. இந்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் வரை பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.

எனினும் பாராளுமன்ற உறுப்பினர்களது ஓய்வூதியம் குறித்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு காணப்படுகிறது. காரணம், பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வு பெற்ற பின்னர் நெருக்கடிகளுக்கு உள்ளாவதை அவதானிக்க முடிகிறது.

சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்திலேயே இந்த யோசனை முதன் முதலாக முன்வைக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கு இதனை நடைமுறைப்படுத்துவதால் சிக்கல் இல்லை. ஆனால் அனைவருக்கும் இதனை நடைமுறைப்படுத்துவது பொருத்தமற்றது.

ஜே.வி.பி.யின் உறுப்பினர்களில் கூட இந்த யோசனை தொடர்பில் வேறுபட்ட நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் ஜே.வி.பி. தலைமையகத்தால் கொள்ளையிடப்பட்டதாகவும் சிலர் குறிப்பிட்டிருந்தனர். இன்றும் அதே நிலைமை காணப்படுகிறது. ஜே.வி.பி. உறுப்பினர்கள் எவ்வாறு வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்கின்றனர் என்று தெரியவில்லை.

மக்களின் உண்மையான பிரச்சினைகளை உணர்ந்து அவற்றுக்கான தீர்வினை வழங்கி இவர்களுக்கு பழக்கம் இல்லை. எனவே இந்த அரசாங்கத்தின் ஆட்சியில் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வினை வழங்க முடியாது என்றார்.