309 சுங்கக் கலன்கள் : விசாரணை அறிக்கையை வெளியிட அரசாங்கம் ஏன் தயங்குகிறது?

46 0

சுங்கத்தில் இருந்து எந்தவித பரிசோதனையும் இன்றி விடுவிக்கப்பட்ட 309 கொள்கலன்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள ஜனாதிபதியால் நிமிக்கப்பட்ட குழுவின் விசாரணை அறிக்கை ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டு ஒரு மாதகாலம் கடந்துள்ள போதும் அதனை ஜனாதிபதி வெளியிடாமல் வைத்துக்கொண்டிருக்கிறார். இந்த அறிக்கை அரசாங்கத்துக்கு பாதிப்பு என்பதாலே பாராளுமன்றத்துக்கு கூட அரசாங்கம் சமர்ப்பிக்காமல் இருக்கிறது. அத்துடன் சுங்கத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 400 உப்பு கொள்கலன்களில் 6 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன. இவை யாருடையது என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

சுங்கத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 400 உப்பு கொள்கலன்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சுங்கத்தில் இருந்து எந்தவித பரிசோதனையும் இல்லாமல் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் 309 கொள்கலன்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை, ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் நெருங்குகின்றன.

ஆனால் இதுவரை அந்த அறிக்கையை ஜனாதிபதி வெளியிடவில்லை. அதேநேரம் விசாரணை அறிக்கையின் பிரகாரம்  கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் எந்த விசாரணையும் இடம்பெறுவதாக தெரியவில்லை. யாரிடமாவது வாக்குமூலம் பெறுவதையும் காணவில்லை.

ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டுள்ள விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விடயங்கள் அரசாங்கத்துக்கு பாதிப்பான விடயம் என்பதாலே இதனை வெளியிடாமல் இருக்கின்றனர். பாராளுமன்றத்துக்குகூட சமர்ப்பிக்கவில்லை.

இந்த அறிக்கையில் இருக்கும் சில விடயங்களை  நான் பாராளுமன்றத்தில் தெரிவித்த போது, அதனை அரசாங்கத்தில் இருப்பவர்கள் யாரும் மறுக்கவில்லை.

அதேநேரம் அந்த அறிக்கையை விரைவாக பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தாா். ஆனால் இதுவரை அதனை சமர்ப்பிக்கவில்லை.

அதேநேரம் நாட்டில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டபோது அரசாங்கம் வெளிநாட்டில் இருந்து உப்பு இறக்குமதி செய்ய தீர்மானித்தது. அதன் பிரகாரம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உப்பு கொள்கலன்களில் 400 கொள்கலன்கள் விடுவிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த கொள்கலன்கள் ஜனாதிபதி உப்பு இறக்குமதி செய்வதற்கு அனுமதித்து வர்த்தமானியில் வெளியிடப்பட்ட திகதிக்கு பின்னர் வந்த கொள்கலன்கள் என்பதாலே இவற்றை விடுவிக்காமல் இருப்பதாக சுங்க அதிகாரிகள், குறித்த கொள்கலன்களின் உரிமையாளர்களுக்கு தெரிவித்திருக்கின்றனர்.

ஆனால் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்த 400 கொள்கலன்களில் 6 கொள்கலன்கள் சுங்கத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளன. இது எவ்வாறு முடியும்? விடுவிக்கப்பட்ட 6 கொள்கலன்களும் யாருடையது என்பதை அரரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.

அதேநேரம் இவ்வாறு அரசாங்கம் இறக்குமதி செய்த 11ஆயிரம் மெட்ரிக்தொன்னில் 4ஆயிரம் மெட்ரிக்தொன் உப்பு, அம்பாந்தோட்டை உப்பு நிலையத்துக்கு  அனுப்பப்பட்டிருக்கிறது.

ஏனைய 7 மெட்ரிக்தொன் உப்பு யாருக்கு கொடுத்தது என எந்த தகவலும் இல்லை.இதுதொடர்பாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்டபோது அதற்கு எந்த பதிலும் இல்லை.

எனவே வெளிப்படைத் தன்மையுடன் ஆட்சி செய்வதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தின் நிர்வாணம் தற்போது வெளிப்பட்டு வருகிறது என்றார்.