மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு

57 0

மன்னார் தீவு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தற்போது மன்னார் – மதவாச்சி பிரதான வீதியூடாக  கொண்டுவரப்பட்டுக் கொண்டிருக்கும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்களை மன்னார் நகருக்குள் கொண்டு வருவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து மன்னார் மக்கள் திங்கட்கிழமை (4) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்றுகூடினர்.

மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளாரின் அழைப்பிற்கு இணங்க அருட்தந்தையர்கள், மூர்வீதி ஜும்மா பள்ளி பிரதம மௌலவி, பொது அமைப்புக்களின் ஒன்றிய பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்புகள் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை (4) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்றுகூடினர்.

இந்த நிலையில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தலைமையில் சட்டத்தரணி பா.டெனிஸ்வரன், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர்  அருட்தந்தை கிறிஸ்து நேசன் அடிகளார் ஆகியோர் சென்று மாவட்ட அரசாங்க அதிபர் கா.கனகேஸ்வரனுடன் கலந்துரையாடினர். இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நிர்வாகம் எம்.பிரதீப் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது தற்போது மன்னார் நகர பகுதியில் சில கிராமங்களில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்களுக்கு மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில் ஞாயிற்றுக்கிழமை (3) மன்னார் நகருக்குள் கனரக வாகனங்களில் கொண்டுவரப்பட்டுக் கொண்டிருந்த காற்றாலை மின் கோபுரம் அமைப்பதற்கான பாரிய பொருட்கள் மடு பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த பொருட்களை மன்னாருக்குள் கொண்டு வர மக்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்ற நிலையில் குறித்த விடயங்கள் குறித்தும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

குறித்த கலந்துரையாடலின் போது குறித்த மின் திட்ட நடவடிக்கைக்கான அமைச்சரவை அனுமதி பெற்றுக் கொள்ளப் பட்டமை தெரியவந்துள்ளது.குறித்த வேலைத்திட்டத்தை அரச அதிகாரிகள் தடுத்து நிறுத்தும் பட்சத்தில் அதிகாரிகள் தனிப்பட்ட முறையில்  மேலதிக செலவீனங்களை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்ற விடையமும் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் ஒன்றுகூடிய மக்களுக்கு கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டமையினால் சட்ட ரீதியாக குறித்த விடயத்தை அணுக வேண்டி இருக்கின்றது. இவ்விடயம் தொடர்பாக நாங்கள் ஏனைய சட்டத்தரணிகளுடனும் உரையாடி இருக்கின்றோம்.

இவ்விடயம் தொடர்பாக எதிர் வரும் புதன்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை வழக்கு ஒன்றை தாக்கல் செய்து சில கட்டளைகளை பெற்றுக்கொள்ள உள்ளோம். எவ்வித ஆவணங்களும் இல்லாமல் உடனடியாக மாவட்ட நீதிமன்றத்தை நாடுகின்ற போது எமக்கு பின்னடைவுகளை ஏற்படுத்தும்.

எனவே எதிர்வரும் புதன்கிழமை வரை மக்களின் எதிர்ப்பை முன்னெடுக்கவேண்டிய தேவை உள்ளது. குறித்த நடவடிக்கைகளுக்கு எதிராக நீதி மன்றத்தின் கட்டளையை பெற்றுக் கொள்ளும் வரை எமது நடவடிக்கைகளை தொடர வேண்டும்.

குறித்த திட்டங்களினால் எதிர்கால சந்ததிகள் பாரிய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க உள்ளனர்.இந்த நிலையிலே குறித்த விடயம் தொடர்பாக சட்ட ரீதியாக சில நடவடிக்கைகளை முன்னெடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் திங்கட்கிழமை மாவட்ட ரீதியில் பாரிய போராட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் குறுகிய நேரத்தில் அதனை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதி தேர்தலின்போது மன்னாருக்கு வருகை தந்து கூறியிருந்தார். மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி காற்றாலை மின் உற்பத்தி திட்டம் முன்னெடுக்கப்படாது என்று குறித்த திட்டத்திற்கு தடை விதிக்கப்படும் என கூறி இருந்தார்.

இந்த நிலையிலே குறித்த திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனினும் மக்களின் ஒத்துழைப்பு எமக்கு தேவை என தெரிவித்தார்.

இந்த நிலையில் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்றுகூடியவர்கள் மன்னார் நகர சுற்று வட்ட பகுதிக்குச் சென்று ஒன்றுகூடினர்.

எதிர்வரும் புதன்கிழமை வரை தொடர்ச்சியாக ஒன்றுகூடி தமது எதிர்ப்பை தெரிவிப்பது என்றும் மன்னார் நகருக்குள் குறித்த காற்றாலை கோபுரங்கள் அமைப்பதற்காக கொண்டு வரும் பொருட்களை நகருக்குள் கொண்டுவர அனுமதிப்பதில்லை என்றும் மக்கள் தெரிவித்தனர்.

மக்களுக்கு ஆதரவாக உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.