முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்யும் வகையில் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்துக்கு எதிராக உரிய சட்டநடவடிக்கை எடுப்போம்.2029 ஆம் ஆண்டு நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம். தற்போதைய செயற்பாடுகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க நேரிடும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்யும் சட்டமூலம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலக்காகக் கொண்டு விடுதலை புலிகள் அமைப்பை மகிழ்விப்பதற்காக இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்யும் வகையில் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்துக்கு எதிராக உரிய சட்டநடவடிக்கை எடுப்போம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்காக மாத்திரம் நாங்கள் போராடவில்லை. எதிர்கால ஜனாதிபதிகளுக்காகவும், தேசியத்துக்காகவும் இந்த சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
இந்த அரசாங்கம் வெறுப்பை மாத்திரம் முன்னிலைப்படுத்திச் செயற்படுகிறது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்த எதிர்வரும் மாதத்துடன் ஒருவருடம் நிறைவடையவுள்ள நிலையிலும் கடந்த அரசாங்களை மாத்திரம் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்.ஆனால் கடந்த அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் அபிவிருத்தி திட்டங்களை மாற்றிமில்லாமல் நிறைவேற்றுகிறார்.
2029 ஆம் ஆண்டு நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம்.தற்போதைய செயற்பாடுகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க நேரிடும்.நாட்டு மக்கள் இனியொருபோதும் மக்கள் விடுதலை முன்னணிக்கு ஆட்சியதிகாரத்தை வழங்கமாட்டார்கள் என்பதை அரசாங்கம் நன்கு அறிந்து வைத்துள்ளது.இதனால் தான் அடக்குறைகளை தற்போது கட்டவிழ்த்துள்ளது என்றார்.

