கிராமங்களில் இருக்கும் இளைஞர் சமூக சம்மேளனங்களை மக்கள் விடுதலை முன்னணியின் சேகுவேரா படையணியாக்க அரசாங்கம் எடு்துவரும் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு இந்த நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் கிராமங்களில் இருக்கும் இளைஞர் சமூக சம்மேளனங்களை மக்கள் விடுதலை முன்னணியின் சேகுவேரா படையணியாக்கும் அரசாங்கத்தின் பிழையான நடவடிக்கை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். நாட்டில் எந்த காலத்திலும் இளைஞர் கழகங்கள், சம்மேளனங்கள் அரசியல் மயமாக்கப்படவில்லை. ஆனால் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்தில் கிராமங்களில் இருக்கும் இளைஞர் சமூக சம்மேளங்களை சேகுவேராவின் படையணியாக்க நடவடிக்கை எடுத்துவருகிறது. அதனால் அரசாங்கத்தின் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த கூட்டங்களில் இருந்து, இளைஞர்களின் கூச்சலுக்கு மத்தியில் தப்பிச்செல்வதை காண்கிறோம்.
இளைஞர் சமூக சம்மேளனம் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஊடாகவே நடத்தப்படுகிறது. தேசிய இளைஞர் சேவை மனத்துக்கு இலங்கை அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்படுகிறது. அவ்வாறு இருக்கையில் இளைஞர் சமூக சம்மேளனங்களுக்கான பதவி நியமனங்களுக்கான உறுப்பினர்கள் இதுவரை காலமும் அங்குள்ள உறுப்பினர்களாலே தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இந்த முறை அரசாங்கத்தின் அமைச்சர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் வட்சப் குழுவொன்றை உருவாக்கி, அதன் ஊடாக இளைஞர் சம்மேளனங்களுக்கு உறுப்பினர்களை பெயரிட்டு அனுப்புகிறார்கள்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை கிராமங்களில் இருக்கும் இளைஞர்களுக்கு விரக்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் அதிகமான இளைஞர் சமூக சம்மேளன கூட்டங்களில் இருந்து இளைஞர்கள் வெளியேறு இருக்கிறார்கள். இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர முன்னின்று செயற்பட்ட இளைஞர்களிடமிருந்து அரசாங்கம் அடுத்துவரும் காலங்களில் சிறந்த பாடத்தை கற்றுக்கொள்ளும்.
சாதாரண குடும்பங்களின் பிள்ளைகள் அவர்களின் திறமையை வெளிப்படுத்தி சமூகத்தில் முன்னுக்கு செல்வதற்கான ஒரு களமாகவே இளைஞர் கழகங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் இந்த கழகங்கள் தற்போது ஒரு கட்சியின் உறுப்பினர்கள், அவர்களின் பிள்ளைகளுக்கு மாத்தரம் இதில் சந்தர்ப்பம் வழங்கும் வகையில் செயற்படுவது பிழையான நடவடிக்கை என்பதுடன் அரச நிதியை துஷ்பிரயோகம் செய்யும் செயலாகும். அதனால் ஜனாதிபதி இந்த விடயத்தில் தலையிட்டு இளைஞர் சமூக சம்மேளனங்கள் அரசியல் மயமாக்குவதை நிறுத்த வேண்டும் என்றார்.

