அரசாங்கத்தால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பிரதிபலனாகவே 44 சதவீதத்திலிருந்து 30 சதவீதம் வரை வரிக்குறைப்பை மேற்கொள்ள முடிந்தது. இது குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்வதால் மேலும் தீர்வை வரி குறைக்கப்படும் என எதிர்பார்ப்பதாக பொருளாதார அபிவிருத்திகள் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
கொழும்பில் வியாழக்கிழமை (31) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் இறுதி தீர்மானமாகவே 44 சதவீதமாக காணப்பட்ட தீர்வை வரி 30 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பிரதிபலனாகவே இந்த வரிக்குறைப்பை மேற்கொள்ள முடிந்தது. எவ்வாறிருப்பினும் அந்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முதலாம் திகதி அவற்றுக்கான பதிலும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில் சாதகமான பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம். உலகளாவிய சந்தை நிலைவரங்களில் இவ்வாறான தீர்வை வரிகள் ஏற்றுமதிகளில் தாக்கம் செலுத்தும் ஏனைய சந்தை நிலைவரங்களை அடிப்படையாகக் கொண்டே அமெரிக்காவிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எனவே கூடிய விலைக்கு அமெரிக்காவிடமிருந்து எரிபொருள் கொள்வனவு செய்யப்படுவதாக என்ன வேண்டிய தேவை இல்லை.
ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து டிஜிட்டல் சேவைகளுக்கு 18 சதவீத வரி அறவிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அது முற்றிலும் தவறான செய்தியாகும். வரவு – செலவு திட்டத்திற்கு அமைய ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து அறவிடப்பட வேண்டிய அந்த வரி ஒக்டோபர் முதலாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டு அதனை எவ்வாறு அறவிடுவது என்பதற்கான வர்த்தமானி அறிவித்தலே வெளியிடப்பட்டுள்ளது.
இது சமூகத்தில் தவறாக திரிபுபபடுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு மிகக் குறைந்த அளவிலான சுமையை ஏற்படுத்தும் வகையிலேயே அரசாங்கம் தீர்மானங்களை எடுத்து நடைமுறைப்படுத்தி வருகிறது. புதிதாக எந்த வகையிலும் வரியை அறிமுகப்படுத்துவதற்கு நாம் எதிர்பார்க்கவில்லை. எவ்வாறிருப்பினும் அரசாங்கத்தை நிர்வகித்துச் செல்வதற்கு ஏதேனும் ஒரு வகையில் வருமானத்தை ஈட்ட வேண்டும்.
அதற்கமையவே மக்களுக்கு சுமை அற்ற வகையில் கொள்கையை நாம் பின்பற்றுகின்றோம். புதிதாக எந்தவொரு வரியையும் அறவிட எதிர்பார்க்கவில்லை. அதற்கான தேவையும் அரசாங்கத்துக்கு இல்லை. மாறாக வட் வரி போன்றவற்றை குறைக்க முடியுமா என்பது தொடர்பில் அவதானம் செலுத்தி வருகின்றோம் என்றார்.

