நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதில்லை எனக்கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது திருகோணமலை முத்துநகரில் மக்களின் விவசாய காணிகள் இந்திய நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்திருக்கிறது. அதேபோன்று டொக்யாட்டையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையின் அடிப்படையில் தான் இவ்வாறு செயற்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகிறததென ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (31) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவிக்கு வந்த பின்னர் இதுவரை 6நாடுகளுக்கு உத்தியோகபூர் விஜயம் மேற்கொண்டுள்ளார். அந்த நாடுகளுடன் பல்வேறு ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திட்டுள்ளார். ஆனால் அரசாங்கம் இவ்வாறு வெளிநாடுகளுடன் கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தங்கள் தொடர்பில் எதுவும் நாட்டுக்கு வெளிப்படுத்தியதில்லை.
குறிப்பாக இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்கள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றன. ஆனால் அரசாங்கம் அதுதொடர்பில் எந்த கருத்தையும் தெரிவிப்பதில்லை. அரசாங்கம் இவ்வாறு இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்களை மறைப்பதாக இருந்தால், அதில் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற விடயங்கள் இருக்க வேண்டும். அதனாலே அதனை வெளியிட அச்சப்பட்டு வருகிறது.
திருகோணமலை முத்துநகரில் பல ஆண்டு காலமாக விவசாயம் செய்துவந்த விவசாய பூமியை இந்திய நிறுவனம் ஒன்றுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த மக்கள் இன்று வீதிக்கிறங்கி போராடி வருகின்றனர்.
அதேபோன்று கப்பல்கள் திருத்தும் டொக்யாட் நிறுவனத்தையும் இந்திய நிறுவனத்துக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் இவ்வாறு செயற்படுவது இந்திய அரசாங்கத்துடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையிலா என்ற சந்தேகம் எழுகிறது.
ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருக்கும்போது பல்வேறு நாடுகளுக்கு விஜயம் செய்திருந்தார். அதன்போது அவர் அந்த விஜயத்தின் மூலம் நாட்டுக்கு ஏதாவது நன்மையை பெற்றுக்கொண்டே நாடுதிரும்புவார்.
ரணில் விக்கிரசிங்க இவ்வாறு உத்தியோகபூர் விஜயங்களை மேற்கொண்டால், அந்த விஜயத்தின் பின்னர், அதுதொடர்பில் நாட்டுக்கு அல்லது பாராளுமன்றத்துக்கு தெளிவுபடுத்துவார். ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதுவரை 6 நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளார். அதன் மூலம் நாட்டுக்கு என்ன நன்மை கிடைத்திருக்கிறது என யாருக்கும் தெரியாது.
அதேநேரம் உற்பத்தி பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்து, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தெரிவித்து வந்தது. ஆனால் இன்று செவனகல சீனித் தொழிற்சாலை வீழ்ச்சியடைந்து வருகிறது.
விவசாயிகளுக்கு தேவையான உரத்தை உரிய நேரத்துக்கு வழங்க நடவடிக்கை எடுக்க தவறி வருவதால் குறிப்பாக நெற்பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டு உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாறு நாட்டின் உற்பத்திகள் வீழ்ச்சியடையும்போது அதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காமல் அரிசி, சீனி போன்ற பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவே ஆர்வம் காட்டிவருகிறது. இதன்மூலம் அரசாங்கம் பாரிய லாபத்தை பெறுகிறது என்றார்.

