எதிர்காலத்தில் அரசியல்வாதிகளாக அல்லாமல் இராஜதந்திரிகளாக இருங்கள் என கொழும்பு மஹாநாம கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தெரிவித்துள்ளார்.
கொழும்பு 03 இல் அமைந்துள்ள மஹாநாம கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு அண்மையில் (29) ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற சபா மண்டபத்தில் இடம்பெற்றது.
இங்கு மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி, மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்காலத்தில் அரசியல்வாதிகளாக இருக்கக்கூடாது, மாறாக இராஜதந்திரிகளாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். ஒரு அரசியல்வாதி எப்போதும் அடுத்த தேர்தலை மனதில் கொண்டு செயற்படும் நிலையில், இராஜதந்திரிகள் எப்போதும் அடுத்த தலைமுறையை மனதில் கொண்டு செயற்படுவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, நேர்மையான, சட்டத்தை மதித்து நடக்கும் பிரஜைகளாக வாழவேண்டியதன் அவசியத்தையும் பிரதி சபாநாயகர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும், ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான ஜி.ஜி.எஸ்.சி. ரோஷன், நாட்டின் எதிர்காலத் தலைவர்களாக மக்களுக்கு சேவைசெய்வதில் மாணவர்களுக்குப் பெரும் பெறுப்பு உள்ளது எனக் குறிப்பிட்டார். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள ஏராளமான மக்கள் பயனடையும் வகையில் ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் விஸ்தரிக்கப்பட்டிருப்பதாகவும், பாடசாலை மாணவர்களும் இதன் ஊடாக நன்மை அடைய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
பதவியணித் தலைமை அதிகாரியும், பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன இங்கு சிறப்புரையாற்றியதுடன், பாராளுமன்றத்தின் வகிபாகம் மற்றும் அதன் நடைமுறைகள் பற்றி மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.
மாணவர் பாராளுமன்றம் மாணவர்களின் ஆளுமை மேம்பாடு மற்றும் திறன் விருத்திக்கு முக்கியமான வாய்ப்பாக அமைகின்றது என பாராளுமன்றத்தின் சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம்.ஜயலத் பெரேரா தெரிவித்தார்.
தமது பாடசாலை புதிய தொழில்நுட்பத்துடன் தொடர்ச்சியாக முன்னேறி வருவதாகவும், இந்தப் பயணத்தில் மாணவர்களின் தலைமைத்துவத் திறன்களை மேம்படுத்துவதற்கு இவ்வாறான நிகழ்ச்சித்திட்டங்கள் அவசியமானவை என்றும் கொழும்பு மஹாநாம கல்லூரியின் அதிபர் ஐ.விதானகே குறிப்பிட்டார்.
மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வையடுத்து சபாநாயகர் மற்றும் உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து மாணவர் பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் அமைச்சுக்கள் மூலம் பாடசாலையில் செயல்படுத்த விரும்பும் திட்டங்கள் உள்ளிட்ட முன்மொழிவுகளை முன்வைத்ததும் மாணவர் பாராளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.
அத்துடன், இந்நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்களுக்கு அதிதிகளால் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல, மஹாநாம கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்திற்குப் பொறுப்பான ஆசிரியர் ஜானகி மதவனாராச்சி, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.








