மாலைதீவு விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க

68 0

மாலைதீவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க புதன்கிழமை (30) இரவு நாடு திரும்பினார்.

மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பையேற்று கடந்த 28 ஆம் திகதி மாலைதீவு நாட்டுக்கான பயணத்தை ஜனாதிபதி ஆரம்பித்தார்.

இந்த விஜயத்தின் போது, மாலைதீவு அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் அரச தலைவர்களுடன், பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து விரிவான கலந்துரையாடல்களை அனுரகுமார திசாநாயக்க நடத்தினார்.

இந்த விஜயத்தின் போது இரு தரப்பினருக்கும் இடையே ஒப்பந்தங்கள் கைச்சாதிடப்பட்டன. அவற்றில் மாலைதீவு வெளிவிவகார சேவை நிறுவனம் (FOSIM) மற்றும் பண்டாரநாயக்க இராஜதந்திர பயிற்சி நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தமும் (MoU) அடங்கும். பரஸ்பர சட்ட உதவி தொடர்பில் ஒப்பந்தமும் கைச்சாதிடப்பட்டது.

இந்த ஒப்பந்தங்கள் பல்வேறு துறைகளில் மாலைதீவு மற்றும் இலங்கை இடையேயான உறவுகளையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் ஒப்பந்தம் குற்றவியல் விடயங்களில் பரஸ்பர சட்ட உதவியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இரண்டாவது ஒப்பந்தம் இராஜதந்திர பயிற்சி மற்றும் அந்தந்த நிறுவனங்களுக்கு இடையே தொடர்புடைய தகவல்கள் மற்றும் ஆவணங்களின் பரிமாற்றத்தில் கவனம் செலுத்துகிறது.