உலகின் முதன்மையான பாதுகாப்பு கண்காட்சிகளில் ஒன்றான ஐ.டி.ஈ.எப். என்ற 17ஆவது சர்வதேச பாதுகாப்பு தொழில் கண்காட்சி, துருக்கி குடியரசின் ஜனாதிபதியின் அனுசரணையுடன், துருக்கி தேசிய பாதுகாப்பு அமைச்சினால் நடத்தப்பட்டு, துருக்கி ஆயுதப்படைகளினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வு, அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்துவதற்கும் பாதுகாப்புத் துறையில் சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும் ஒரு உலகளாவிய தளத்தை உருவாக்கியுள்ளது. இந்த கண்காட்சி, ஜூலை 22 முதல் 27 வரை இஸ்தான்புல் எக்ஸ்போ மையத்தில் நடைபெற்றது.
துருக்கியின் தேசிய பாதுகாப்பு பிரதி அமைச்சர் பிலால் துர்தாலியின் அழைப்பின் பேரில் அந்நாட்டிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இலங்கையின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), தனது இந்த விஜயத்தின்போது துருக்கியின் பல மூத்த பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் கலந்தரையாடலில் ஈடுபட்டார்.
இதற்கமைய துருக்கியின் தேசிய பாதுகாப்பு பிரதி அமைச்சர்களான பிலால் துர்தாலி மற்றும் மூசா ஹெய்பெட், துருக்கிய தரைப்படைகளின் தளபதி ஜெனரல் செல்சுக் பைரக்தரோக்லு, கடற்படைத் தளபதி அட்மிரல் எர்குமென்ட் டாட்லியோக்லு மற்றும் விமானப்படைத் தளபதி ஏர் ஜெனரல் ஜியா செமல் கடியோக்லு ஆகியோரை சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய்வதில் இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போது கவனம் செலுத்தப்பட்டன. கூட்டுறவு முயற்சிகள் மூலம் பரஸ்பர உறவுகளை வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டையும் இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

