வடக்கு மாகாணத்தில் பின்தங்கிய கல்வித்தரத்தை முன்னேற்ற கல்விமான்கள் புதிய திட்டங்களை உருவக்க வேண்டும்

69 0
வடக்கு மாகாணத்தில் பின்தங்கியுள்ள  கல்வித்தரத்தை முன்னேற்றுவதற்கு யாழ்ப்பாணம், வவுனியா பல்கலைக்கழக சமூகம் கல்வித்துறைசார் அறிஞர்கள் ஒன்றிணைந்து புதிய செயற்றிட்டங்களை உருவாக்க வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

கடந்த க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் ஒன்பதாவது நிலையில் வட மாகாணம் நிற்பதை அறிந்து பலரும் கவலை அடைந்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர், வவுனியா பல்கலைக்கழகத் துணைவேந்தர், இரு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் இரு பல்கலைக்கழகங்களின் போராசிரியர்கள் மற்றும் கல்விதுறைசார் அறிஞர்கள் ஒன்றுகூடி ஆக்கபூர்வமான முயற்சிகளை  எடுக்க வேண்டும்.

கல்வித் திணைக்களங்கள் செயற்றிறனோடு இயங்குவதாக இல்லை. வடக்கு மாகாண கல்வி அமைச்சு கடந்த காலங்களில் பாடசாலைகளை  சுதந்திரமாக இயங்கவிடாமல், குழப்பங்களைத் தோற்றுவித்தமையை ஊடகங்கள் பல எடுத்துரைத்தன.

ஆசிரிய இடமாற்றம் தொடர்பாக ஏற்பட்ட கல்விப் பாதிப்புப் பற்றி ஆராய வேண்டும். பாடசாலைக் கல்வியில் நாட்டம் இல்லாது தனியார் கல்வி நிலையங்களை முற்றுகையிடும் நாகரிகம் எந்தளவு தூரம் பயன் தந்துள்ளது?

எனவே, எதிர்கால நன்மை கருதி, வடக்கு மாகாண கல்வி நிலையை உயர்த்துவதற்கு கல்வியால் உயர்ந்த பல்கலைக்கழக சமூகம் வடக்கு மாகாண  கல்வித் திணைக்கள அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள் ஒன்றிணைந்து புதிய செயற்றிட்டங்களை உருவாக்க வேண்டும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வித்துறை சார்ந்தவர்கள் இவ்விடயத்தில் முன்வந்து செயற்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று குறிப்பிட்டார்.