இரத்தினபுரி மாவட்டத்திற்கான அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்று (29) இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான சாந்த பத்மகுமார மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த அபிவிருத்தி குழுக் கூட்டத்தில், மக்களுக்கான பணிகளை வினைத்திறன் மிக்கதாகவும் பணிகளை இலகுவாக்கித் துரிதப்படுத்துவதற்காகவும் மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தியினை கருத்திற்கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டன.
இதன்போது பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மாவட்டத்தின் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கான தலைவராக நியமிக்கப்பட்ட அதேவேளை கல்வி, கலாசார மற்றும் சமயத்திற்காக கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் சாந்த பத்மகுமாரவினால் நியமிக்கப்பட்டார்.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களான உபுல்கித்சிறி காணி நீர்ப்பாசன சுற்றாடல் மற்றும் பெருந்தோட்டத் துறைகளுக்கும், சுனில் ராஜபக்ஷ வர்த்தக நுகர்வோர் சுற்றுலா மற்றும் கைத்தொழில் துறைகளுக்கும், வசந்த புஷ்பகுமார நகர அபிவிருத்தி விஞ்ஞான தொழில்நுட்பத் துறைக்கும், ஜனக்க சேனாரத்ன சுகாதார மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைக்கும் நிலுசா கமகே மகளிர் மற்றும் இளைஞர், விளையாட்டுத் துறைகளுக்கும் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் பிரதீப், எமது மக்கள் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல எமக்குக் கிடைத்திருக்கின்ற ஒரு பெரும் வாய்ப்பு இதுவாகும். இதன் மூலம் எமது தோட்டப்புற மக்களுக்கான பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கான விசேட கலந்துரையாடலொன்றும் மேற்கொள்ளப்பட்டிருந்தது எனத் தெரிவித்தார்.

