கண்டி தேசிய வைத்தியசாலைக்குச் சொந்தமான காணியில் சட்டவிரோத குடியேற்றங்கள் அதிகரிப்பு

70 0

கண்டி தேசிய வைத்தியசாலைக்குச் சொந்தமான காணியில் 267 குடும்பங்கள் சட்டவிரோதமாக உரிமை கொண்டாடுவதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் இரேஷா பெர்னாண்டோ தெரிவித்தார்.

கண்டி செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

விவசாய கால்டை அபிவிருத்தி அமைச்சர் கே.டி லால்காந்த  தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வைத்தியர் இரேஷா பெர்னாண்டோ மேலும் தெரிவிக்கையில்,  சட்டவிரோத குடியேற்றங்கள் மட்டுமல்லாது, கண்டி தேசிய வைத்தியசாலையைப் பொறுத்தவரையில் இன்னும் பல பிரச்சினைகளும் இருப்பதாக அவர் கூறினார்.

கண்டி தேசிய வைத்தியசாலைக்குச் செல்லும் பிரதான பாதை அடிக்கடி சட்டவிரோத வியாபாரிகளால் தடைப்படுகிறது.

அதிகளவு வாகனங்கள் வீதியின் இரு பக்கங்களிலும் நிறுத்திவைக்கப்படுகின்றன. இதனால் நோயாளர் காவு வண்டி போன்ற வாகனங்களும் நோயாளர்களை அவசரமாகக் கொண்டு செல்லும் வாகனங்களும் வைத்தியசாலையினுள்  பிரவேசிக்க முடியாதவாறு வீதி தடைப்பட்டு காணப்படுகிறது. இது உடன் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினையாகும்.

அத்துடன் வைத்தியசாலையை அண்மித்த இடங்களில் அதிகளவு மலர்ச்சாலைகள் இருப்பதால் சில நேரங்களில் இறுதிக் கிரியைகளின்போது பெருமளவு வாகனங்கள் அங்கு வருகின்றன. அவ்வேளைகளிலும் அவ்வீதி தடைப்படுவது பாரிய பிரச்சினையாக உள்ளது என்றார்.

அதனையடுத்து, இதற்கு விளக்கமளித்த அமைச்சர் லால் காந்த இப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என்றும் இந்த விடயத்தில் பொலிஸார் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.