இலங்கையின் 14 அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் அரசியல் தலைவர்கள் 24 பேர் உள்ளிட்ட பேராளர்கள் கடந்த 14ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை இந்தியாவுக்கான விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
இந்த பேராளர்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், இளைஞர் அணி தலைவர்கள் உள்வாங்கப்பட்டிருந்தனர்.
இரு நாடுகளினதும் பல்வேறு மட்டங்களையும் சேர்ந்த கட்சிகளிடையிலான அரசியல் தொடர்புகளை மேம்படுத்தும் நோக்குடன் முதல் தடவையாக நடைபெற்ற நிகழ்ச்சித் திட்டம் இதுவாகும்.

இக்குழுவினர் இந்தியாவின் டில்லி – NCR, மற்றும் பீகார், கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததுடன் இந்த விஜயத்தின் மூலமாக இந்தியாவின் அபிவிருத்தி செயற்றிட்டங்கள், பொருளாதார நவீனத்துவம், தொழில்நுட்ப முன்னேற்றங்கள், ஜனநாயக பாரம்பரியங்கள் மற்றும் அதன் செழிப்பான கலாசார மரபு ஆகியவை குறித்த கண்ணோட்டத்தை பெற்றிருந்தனர்.
புதுடில்லிக்கான விஜயத்தின்போது இக்குழுவினர் வெளியுறவுத்துறை செயலர் ஸ்ரீ விக்ரம் மிஷ்ரி அவர்களை சந்தித்திருந்தனர்.

இந்த சந்திப்பின்போது இந்திய – இலங்கை பங்குடைமைக்கான எதிர்கால வழித்தடமானது தொழில்நுட்பம், முதலீடு மற்றும் தொடர்புகள் ஆகியவற்றிலான உறவுகளை வலுவாக்குவதில் தங்கியுள்ளது என வெளியுறவுத்துறை செயலாளர் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் அயலுறவுக்கு முதலிடம் கொள்கை மற்றும் மஹாசாகர் கோட்பாடு ஆகியவற்றின் கீழ் இலங்கையின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்கும் இந்தியா கொண்டிருக்கும் உறுதிப்பாட்டை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதன் அங்கமாக பாராளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இப்பேராளர்கள் சட்டசபை செயல்முறைகள், பாராளுமன்ற குழுக்களின் முறைமை மற்றும் ஏனைய தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல் அமர்வுகளில் பங்கேற்றிருந்தனர்.
அத்துடன் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டசபைகளின் உறுப்பினர்கள், இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த இளம் தலைவர்கள் உள்ளிட்டோரை சந்திக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்திருந்தது. அது மட்டுமல்லாமல் பீகார் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் ஆளுநர்களுடனும் சந்திப்புகள் இடம்பெற்றிருந்தன.

அரசியல் குறித்த பரிமாற்றங்களுக்கு மேலாக இந்நிகழ்ச்சித் திட்டத்தில் இந்திய உற்பத்தித் துறை குறித்த அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகளும் உள்வாங்கப்பட்டிருந்தன. அந்த அடிப்படையில் மாருதி சுசுகி, BOSCH India மற்றும் Ather Energy ஆகிய நிறுவனங்களின் ஆலைகளுக்கு இக்குழுவினர் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
இந்தியாவின் டிஜிட்டல் பொதுக்கட்டமைப்பு மேம்படுத்தல் மூலமாக இந்தியா பெற்ற வெற்றி தொடர்பாக இந்திய தனித்துவ அடையாள அதிகார சபையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது கருத்துகள் பகிரப்பட்டிருந்தன.
கல்வித்துறை மற்றும் ஆராய்ச்சி & அபிவிருத்தித் துறையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் தொடர்பாக புதுடில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஐஐடி டெல்லி, பீகார் நாலந்தாவில் உள்ள நாலந்தா பல்கலைக்கழகம், இந்திய விஞ்ஞான நிலையம் மற்றும் கர்நாடகா, பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) ஆகியவற்றுக்கான விஜயங்களின்போது கலந்துரையாடப்பட்டிருந்தது. இந்திய தொழில்துறை சம்மேளனத்தினரால் புதுடில்லியில் இக்குழுவினருடனான வட்டமேசை கலந்துரையாடல் ஒன்றும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை புலமையாளர்கள் மற்றும் ஆய்வு நிலையங்களுடன் நடைபெற்றிருந்த கலந்துரையாடல்களில் இந்திய பொருளாதாரம் மற்றும் வளர்ந்துவரும் வெளிவிவகாரக் கொள்கை, புலம்பெயர்ந்தோரின் வகிபாகம், இந்திய கலாசாரம் மற்றும் நாகரிகம், ஸ்திரமானதும் முழுமையானதுமான அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இந்தியாவின் போத்கயாவில் உள்ள இந்திய முகாமைத்துவ நிலையத்தில் இப்பேராளர்களுக்காக பொதுக் கொள்கை, ஆட்சி மற்றும் தலைமைத்துவம் தொடர்பாக ஒரு நாள் திசை முகப்படுத்தல் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
இப்பேராளர்கள் போத்கயாவில் தங்கியிருந்த சந்தர்ப்பத்தில் இரு நாடுகளிடையிலான காலவரம்பற்ற பௌத்த உறவுகளை சுட்டிக்காட்டும் வகையில் மகாபோதி விகாரைக்கும் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இலங்கையைச் சேர்ந்த இளம் தலைவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இப்பன்முக நிகழ்ச்சி திட்டமானது புதுடில்லியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சு மற்றும் கலாசார உறவுகளுக்கான இந்திய பேரவை ஆகியவற்றால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
2025 ஏப்ரலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது இலங்கை அதிகாரிகளுக்கு வருடாந்தம் 700 பயிற்சி ஆசனங்களை வழங்குவதாக மேற்கொண்ட அறிவிப்பின் அடிப்படையில் இவ்விஜயம் திட்டமிடப்பட்டது.
இந்திய இலங்கை பங்குடைமையின் எல்லையற்ற ஆற்றல்களை உணர்ந்துகொள்வதில் இளம் அரசியல் தலைவர்கள் கொண்டிருக்கும் முக்கிய வகிபாகத்தினை இந்த நிகழ்ச்சித்திட்டம் மீள உறுதிப்படுத்துகின்றது.




