நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது 1,182 கைது!

69 0

நாடளாவிய ரீதியில் 26ஆம் திகதி சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது 1,182 கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில்  திறந்த  பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 410 பேரும் பல்வேறு குற்றச் செயல்களுடன் நேரடி தொடர்புடையதாக கூறப்படும் 20 பேரும் உள்ளடங்குவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.

நாட்டில் இடம்பெறும் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பணிப்புரைக்கு அமைய அண்மைய நாட்களாக நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக நாடளாவிய ரீதியில் சனிக்கிழமை (26) விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதற்காக பொலிஸார், பொலிஸ் விசேட அதிரப்படையினர், இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைச் சேர்ந்த சுமார் 7600 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் கடமைக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.

இதற்கமைய  24 ஆயிரத்து 343 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததுடன்  இதன்போது 9 ஆயிரத்து 727 வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.

இதற்கமைய ஹெரோயின், ஐஸ் உள்ளிட்ட போதைப் பொருட்களை தம்வசம் வைத்திருந்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 1,182 பேர் கைது செய்யப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து  230  கிராம் 159  மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள்,  220 கிராம் 415  மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும்  பல்வேறு குற்றச் செயல்களுடன் நேரடி தொடர்புடையதாக கூறப்படும் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மேலும் நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 410 சந்தேகநபர்களும் கைது செய்ய பப்டடுள்ளனர். இதற்கு மேலதிகமாக 4 துப்பாக்கிகளும் பறிமுதல்  செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே    கடந்த 18 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் நாடளாவிய ரீதியில்  மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 2 கிலோ 100 கிராம் ஐஸ் போதைப்பொருள், ஒரு கிலோ 300 கிராம் ஹெரோயின் போதைப்பொருள், 82  கிலோ கேரள கஞ்சா என்பனவும் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் நாட்களில்  இவ்வாறான சுற்றிவளைப்புகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும்  குறித்த சோதனை நடவடிக்கைகளின் போது பொலிஸாருக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குமாறும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.