கடந்த அரசாங்கங்கள் கல்வித்துறையை தமது அரசியல் தீர்மானங்களைச் செயல்படுத்துவதற்காகப் பயன்படுத்தினர்!

77 0

கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் கல்வியைப் பற்றிப் பெருமளவில் பேசிய போதிலும் அவர்கள் முன்னெடுத்து வந்த அரசியல் கலாச்சாரத்தினால் கல்வித்துறையில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. பெரும்பாலும் அவர்கள் கல்வியையும் தமது அரசியல் தீர்மானங்களைச் செயல்படுத்துவதற்காகப் பயன்படுத்தினர். தமது பெயரால் கட்டிடத்தைத் திறந்து வைப்பது போன்ற கண்காட்சி அரசியலுக்காகத் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி கல்வித்துறைக்கு பெரும் அழிவை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கல்விச் சீர்திருத்தம் என்பது வெறுமனே புதிய பாடப்புத்தகங்களை அறிமுகப்படுத்துவது அல்ல.மாறாக ஒட்டுமொத்த கல்வி முறைமையையும் மாற்றி அமைப்பதாகும். எனவே கல்வி ரீதியாக முன்னேற்றமடைந்த ஒரு நாடாக எமது நாட்டை அபிவிருத்தி அடையச் செய்வதற்கு அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

‘வளமான நாட்டிற்காக பெண்களாகிய நாம் அனைவரும் ஒன்றாக’ என்னும் தலைப்பில் தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட மகளிர் ஒன்றியம் இரத்தினபுரி நகர மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த கருத்துப் பரிமாற்றக் கலந்துரையாடலில் கலந்துகொண்டபோது பிரதமர் இவ்வாறு கூறினார்.

கல்விச் சீர்திருத்தம் குறித்து மேலும் உரையாற்றிய பிரதமர்

பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் சுமையாக அமையாத கல்வி முறைமையை உருவாக்குவது தமது அரசியல் இயக்கத்தினுள் தொடர்ச்சியாகக் கலந்துரையாடப்பட்ட ஒரு விடயம். இது தமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் புதிய கல்விச் சீர்திருத்தமானது புதியதோர் பாடப்புத்தகத்தை அறிமுகப்படுத்துவது மட்டுமல்ல ஒட்டுமொத்த கல்வி முறைமையையும் மாற்றி அமைக்கும் ஒரு செயல்திட்டமாகும்.

நாம் இந்த முறைமைக்குள் கண்டிருக்கும் பல முக்கிய பிரச்சினைகள் உள்ளன. பரீட்சைகளை மையமாகக் கொண்ட இக்கல்வி முறைமையினால் சிறார்கள் மீது ஏற்படும் அழுத்தம் அதனால் பெற்றோருக்கு ஏற்படும் அழுத்தம்இ அதனால் ஏற்பட்டிருக்கும் போட்டியினால் உருவாகி இருக்கும் தீமையான சமூக விளைவுகள் போன்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விடை காண நாம் இக்கல்விச் சீர்திருத்தத்தின் மூலம் முயற்சிக்கின்றோம்.

கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் கல்வியைப் பற்றிப் பெருமளவில் பேசியபோதிலும்  கல்வித்துறை சார்ந்த பிரச்சினைகளை இனங்கண்டபோதிலும் அவர்கள் முன்னெடுத்து வந்த அரசியல் கலாச்சாரத்தினால் கல்வித்துறையில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. பெரும்பாலும் அவர்கள் கல்வியையும் தமது அரசியல் தீர்மானங்களைச் செயல்படுத்துவதற்காகப் பயன்படுத்தினர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் மாத்திரம் ‘தேசியப் பாடசாலை’ எனப் பெயர் பலகையை மாத்திரம் மாற்றிய எத்தனை பாடசாலைகள் இருக்கின்றன? கல்வியின் தரத்திற்கு எத்தகைய நிலைமை ஏற்பட்டபோதிலும்இ தமது பெயரால் கட்டிடத்தைத் திறந்து வைப்பது போன்ற கண்காட்சி அரசியலுக்காகத் தமது அதிகாரத்தைப் பயன்படுத்திய இந்த அரசியல்வாதிகள்இ தமது அரசியலுக்காகக் கல்வியைப் பயன்படுத்தி அத்துறைக்கு பெரும் அழிவை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

அதேபோன்று கடந்தகால அரசாங்கங்கள் வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கான ஒதுக்கீட்டைப் படிப்படியாகக் குறைத்துஇ கல்வியின் சுமையை பெற்றோர் மீது சுமத்தின. கல்வித்துறைக்கு மிகவும் முக்கியமான அம்சமாக விளங்கும் ஆசிரியர் உள்ளிட்ட கல்வித்துறை நிர்வாக சேவையில் கடமையாற்ற வேண்டியவர்களின் தொழில்சார் வளர்ச்சியை ஏற்படுத்தி மனிதவளத்தை மேம்படுத்துவதற்குப் பதிலாக அந்த மனிதவளத்திற்குப் பாதகங்களை விளைவிக்கும் துறைகளை வளர்ச்சி அடையச் செய்தார்கள் .

கல்விச் சீர்திருத்தம் பற்றி கடந்த அரசாங்கங்கள் கலந்துரையாடியிருந்தபோதிலும் அவ்வாறு கலந்துரையாடுகின்ற அதேவேளையில் கல்வி முறைமையை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான மனிதவளங்கள்இ அடிப்படை வசதிகள் முதலீடுகள் கல்வித்துறைக்கு ஒதுக்கப்படவில்லை என்பதும் தெரியவருகிறது. அவ்வாறு மறுசீரமைப்புக்குத் தேவையான ஒதுக்கீடுகளை மேற்கொள்ளாவிட்டால் இத்தகைய கல்விச் சீர்திருத்தங்களில் தீர்க்கமான மாற்றத்தை ஏற்படுத்துவது கடினம் .

ஆயினும் நாம் மிக நேர்த்தியாகத் திட்டமிட்டு சமூகத்தினுள் இதைப் பற்றிய ஒரு கலந்துரையாடலை ஏற்படுத்தி தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி சமூகத்தில் ஏற்பட வேண்டிய கருத்து மாற்றம் உள்ளிட்ட அனைத்து விடயங்களைப் பற்றியும் கவனம் செலுத்தி இக்கலந்துரையாடல்களில் அவற்றை உள்வாங்கி உண்மையான ஒரு சமூக மாற்றத்திற்குத் தேவையான மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

ஆகையினால் இது பற்றிய பரந்த சமூகக் கலந்துரையாடலை ஏற்படுத்தும் பொறுப்பு உங்களையே சாரும்.

அந்த வகையில் கல்வி ரீதியாக முன்னேற்றமடைந்த ஒரு நாடாக எமது நாட்டை அபிவிருத்தி அடையச் செய்வதற்கும்இ அதனுள் ஒழுக்கமான ஒரு சமூகத்தை ஏற்படுத்துவதற்கும்இ உலக நாடுகளுடன் தோளோடு தோள் நிற்கக்கூடிய பொருளாதார அபிவிருத்தியடைந்த ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் நாம் முன்னெடுத்துச் செல்லும் இந்தக் சமூகக் கலந்துரையாடல்களின் செய்தியை சமூகமயப்படுத்தும் செய்தியாளர்களாகச் செயல்பட முன்வருமாறு அழைப்பு விடுக்கிறோம் என்றார்.