வன விலங்குகள் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாட்டால் பல நூற்றுக்கணக்கான குளங்கள், இலட்சக்கணக்கான ஏக்கர் விவசாயக் காணிகள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. ஆகவே, சாமானிய மக்களின் வாழ்வாதார நிலைமையை கருத்தில் கொண்டு இக்காணிகளை விடுவிக்க அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தொழில் கட்சி உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.
இலங்கை வேலைவாய்ப்பு பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (24) நிலையியற்கட்டளை 27 2இன் கீழ் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
காணிச் சட்ட நியதிகளுக்கு முரணாக கடந்த காலத்தில் வன விலங்குகள் திணைக்களமும் வனவளத்திணைக்களமும் தான்தோன்றித்தனமாக வர்த்தமானி வெளியிட்டுள்ளது. இதனால் பல ஆண்டுகளாக இடம் பெயர்ந்தவர்கள் தமது காணியை எல்லையிடுவதற்கு முன்னதாகவே இத்திணைக்களங்கள் அத்துமீறி செயல்பட்டுள்ளன. பல இடங்கள் வர்த்தமானி பத்திரம் வெளியிடாதபோதும் கூட பொதுமக்கள் தமது காணியில் விவசாயத்தை மேற்கொள்ளும் போது கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தப்படுகின்றனர். நீதிமன்றமும் இதன் உண்மைத்தன்மையை ஆராயாமல் இருப்பது வேதனைக்குரிய விடயம். இதனால் உணவு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படுகிறது.
இத்திணைக்களங்களின் அத்துமீறிய செயற்பாட்டால் பல நூற்றுக்கணக்கான குளங்கள் இலட்சக்கணக்கான ஏக்கர் விவசாயக் காணிகள் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. ஆகவே சாமானிய மக்களின் வாழ்வாதார நிலைமையை கருத்தில் கொண்டு இக்காணிகளை விடுவிப்பது தொடர்பில் பின்வரும் கேள்விகளுக்கு அரசாங்கத்திடம் முறையான பதிலை எதிர்பார்க்கிறேன்.
வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 2009ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்களின் ஊடாக பிரகடனப்படுத்தப்பட்ட வன வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் புராதன பிரதேசங்களாக பிரகடனப்படுத்தப்பட்ட காணிகளின் விபரங்களை வர்த்தமானி
இலக்கம், காணியின் அளவு, பிரகடனப்படுத்தப்பட்டதன் நோக்கம் உள்ளடங்களாக காணி விபரங்களைதர முடியுமா? அத்தோடு இவ்வர்த்தமானி அறிவித்தல்களின் ஊடாக பிரகடனப்படுத்தப்பட்ட தனியார் காணிகளின் அளவு எவ்வளவு?
அவ்வாறு காணிகள் பிரகடனப்படுத்தப்பட்டதன் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை என்ன?. எந்தவிதமான வர்தமானி அறிவித்தல்கள் ஊடாகவேனும் பிரகடனப்படுத்தப்படாத காணிகளை வன பாதுகாப்புத் திணைக்களம் எல்லையிட்டு இருப்பதை நீங்கள் அறிவீர்களா? அவ்வாறான காணிகளை விடுவிக்கமுடியுமா? இல்லையெனில் அவ்வாறான காணிச் சொந்தக்காரர்களுக்கு மாற்றுக் காணிகளையோ அல்லது இழப்பீடுகளையோ வழங்குவதற்கான திட்டங்களேனும் உண்டா?
வன்னி மாவட்ட மக்களால் பாரம்பரியமாக விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி போன்ற ஜீவனோபாய தேவைகளுக்காக பாவிக்கப்பட்ட காணிகளை சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் ஒதுக்கீடு செய்து கொள்வதற்கு விஞ்ஞான ரீதியான கள ஆய்வுகளோ பொதுமக்கள் கருத்துக் கணிப்புக்களோ மேற்கொள்ளப்பட்டனவா?
முறைகேடான காணி சுவீகரிப்புக்கள் பற்றி பல உயர்மட்ட கலந்துரையாடல்கள் நடைபெற்றிருப்பதை அறிவீர்களா? 2025.01.05ஆம் திகதி கடந்த அரசாங்க காலத்தின் போது அப்போதைய ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் உள்ளடங்கலான வன்னி தேர்தல் மாவட்டத்திற்கான விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் 22,043 ஹெக்டேயர் நிலப்பரப்பும், மன்னார் மாவட்டத்தில் 25183 ஹெக்டயார் நிலப்பரப்புக்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 20513 ஹெக்டேயர் காணிகளை விடுவிப்புச் செய்வதற்காக அமைச்சகங்களுக்கிடையிலான தேசிய குழுவிற்கு மக்கள் பிரதிநிதிகள் மாவட்ட செயலாளர் உட்பட அரச அதிகாரிகள் பொது அமைப்புகளைக் கொண்ட மாவட்ட குழுவால் சிபார்சுகள் முன்வைக்கப்பட்டதை அறிவீர்களா?
அவற்றின் அடிப்படையில் அம்மாவட்டங்களுக்கு இதுவரை விடுவிக்கப்பட்ட காணிகளின் விபரம் என்ன? மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் விடுவிப்புச் செய்வதற்காக சிபார்சு செய்யப்பட்ட காணிகளில் எந்தவொரு காணியும் விடுவிக்கப்படவில்லை என்பதை அறிவீர்களா? அவ்வாறு விடுவிக்கப்படாமை ஏன் என்பதைப் பற்றி இச்சபைக்கு தெளிவு படுத்த முடியுமா? விரைவாக விடுவித்து வர்த்தமானி அறிவிப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

