ரோஹிணி விஜேரத்ன எம்.பி. பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும்

76 0

ரோஹினி விஜேரத்ன எம்.பி.யை  இலக்கு வைத்து அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த  முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவே ரோஹிணி விஜேரத்ன எம்.பி.யின் பாதுகாப்பு தொடர்பில் சபாநாயகர் கவனம் செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (24) விசேட கூற்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு வலியுறுத்தி தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

ரோஹினி விஜேரத்ன எம்.பி.ஓர் ஆசிரியராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும், அர்ப்பணிப்புள்ள சமூக சேவையாளராகவும் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சிறந்த சேவைகளை ஆற்றி வருகிறார். கல்வித் துறை, சகல பெண்களின் சிவில், அரசியல், மனித, சமூக, கலாசார மற்றும் பொருளாதார உரிமைகளைப் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறார். என்றாலும், இந்த பாராளுமன்றத்தில் உள்ள சில உறுப்பினர்கள் அவரை இலக்கு வைத்து, அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும்  இழிவான விமர்சனங்களை இடைவிடாது செய்வதன் மூலம் அவரது பயணப் பாதையைத் தடுத்து வருகின்றனர்.

பெண்களின் உரிமைகளைப்  பாதுகாப்போம் என்று பெரும்பான்மையானவர்கள் கூறினாலும், வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் அதனை நடைமுறையில் முன்னெடுப்பது கடமையாக அமைகிறது. ரோஹினி விஜேரத்னவை இலக்கு வைத்து அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த எடுக்கும் முயற்சிகள் குறித்து நான் எனது கடும்  அதிருப்தியை தெரிவிக்கின்றேன்.

எனவே ரோஹினி விஜேரத்னவின் பாதுகாப்பு தொடர்பில் சபாநாயகருக்கு பொறுப்பு காணப்படுகிறது. இதற்கு விசேட  வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டிய தேவை காணப்படுகிறது.

ரோஹினி விஜேரத்னவின் தந்தை தனிநபர் பிரேரணை மூலம் விவசாயிகளினது ஓய்வூதியத் திட்டத்தை ஸ்தாபித்த ஒருவராவார். அவர் ஆற்றிய மகத்தான சேவையை அனைவரும் அறிவர். ரோஹிணி விஜேரத்னவின் நற்பெயரை கெடுக்கும் வகையில், இலக்கு வைக்கப்பட்ட இந்த இழிவான செயல்முறையை நிறுத்துங்கள் என்றார்.