காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக மீளச்செலுத்தும் தேவையற்ற 65 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இந்தியா முன்வந்துள்ள நிலையிலும் இத்துறைமுகத்தை மீளியக்குவதற்கான சூழலியல் தாக்க மதிப்பாய்வு அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ள பின்னரும் இத்துறைமுக அபிவிருத்தி காலம் தாழ்த்தப்படுவதற்கான காரணம் என்ன என்று இலங்கை தமிழ் அரசு கட்சி உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23) நிலையியற்கட்டளை 27/2இல் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரும், பாராளுமன்ற சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்கவிடம் இவ்வாறு கேள்வி எழுப்பிய சிறீதரன் எம்.பி. மேலும் உரையாற்றுகையில்,
இலங்கையிலுள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்களில் ஒன்றான காங்கேசன்துறை துறைமுகம் போருக்கு முற்பட்ட காலத்தில் மிகச்சிறப்பாக இயங்கி வந்துள்ளது. அந்த அடிப்படையில் காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக நோக்கத்திற்கான துறைமுகமாக புனரமைப்பதன் மூலம் இந்தியாவிற்கு அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவுக்கும் வடக்கு-கிழக்கு பகுதிகளுக்குமான பொருள் பரிமாற்றம்சார் வர்த்தக நடவடிக்கைளிலும், சுற்றுலாப் பயணிகளின் வருகையிலும், அந்நிய செலாவணியை ஈட்டுவதிலும் பாரியமாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
2009 வரையான 30 ஆண்டுகால யுத்தம், பிற்பட்ட 15 ஆண்டுகள் என கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் அபிவிருத்தியில் பின்தங்கியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பொருளாதார வளர்ச்சியிலும், இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியின் கடைசிப் பங்காளியாகவுள்ள வடக்கு மாகாணத்தின் பங்களிப்பை அதிகரிக்கவும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி முக்கியத்துவம் பெறுகிறது.
இத்துறைமுக அபிவிருத்திக்காக 65 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இந்தியா முன்வந்துள்ளதால் மீளச் செலுத்தும் தேவையற்ற இந்நிதி உதவி மூலம் மேற்படி துறைமுகத்தை புனரமைத்து மீள ஆரம்பிக்க முடியும் என்ற நிலையில் இத்துறைமுகத்தை மீளியக்குவதற்கான சூழலியல் தாக்க மதிப்பாய்வு அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரும் இத்துறைமுக அபிவிருத்தி காலம் தாழ்த்தப்படுவதற்கான காரணம் என்ன?
இலங்கையின் வரலாற்றில் இத்துறைமுகம் கொண்டிருந்த பொருளாதார பங்களிப்பு இப்பொழுது இல்லாமலுள்ளது. இதனை மேம்படுத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்தல் மற்றும் உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி – இறக்குமதி மூலமான அந்நியச் செலாவணியை ஈட்டும் திட்டங்கள் எவையேனும் அரசிடம் உள்ளதா?
இத்துறைமுகத்தைப் பொறுப்பெடுக்க முன்வந்துள்ள நிலையில், புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு காலம் தாழ்த்தப்படுவது ஏன்? இத்துறைமுக அபிவிருத்தியுடன் தொடர்புடைய சூழலியல் தாக்கங்கள் குறித்து இறுதிசெய்வதில், தொடர்புடைய திணைக்களங்களின் கால இழுத்தடிப்புகள் காரணமாக உள்ளனவா?
காங்கேசன்துறை துறைமுகத்தின் புனரமைப்புப் பணிகள் எப்போது ஆரம்பிக்கப்பட்டு முடிவுறுத்தப்படும் என கேள்விகளை எழுப்பினார்.
இக்கேள்விகளுக்கு பதிலளிக்க அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஒருவார கால அவகாசம் கோரினார்.
தான் இதுவரையில் 4 முக்கிய கேள்விகளை இந்த சபையில் எழுப்பியுள்ள நிலையில் எந்தக் கேள்விகளுக்கும் அரசோ, அமைச்சர்களோ இதுவரையில் பதில் தரவில்லை எனவும் கால அவகாசத்தை மட்டுமே கோருவதாகவும் சிறீதரன் எம்.பி. சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இது தொடர்பில் கவனம் எடுப்பதாக சபைமுதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்க சிறீதரன் எம்.பிக்கு உறுதியளித்தார்.

