தலதா மாளிகை தாக்குதல்கள் குறித்து தகவல்கள் இல்லை – அமைச்சர் ஆனந்த விஜேபால

78 0

தலதா மாளிகையின் பாதுகாவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 36 வருடங்கள் கடந்துள்ளதால், அது தொடர்பில் முறையான எந்த  தகவலும் இல்லை என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ரோஹினி குமாரி எம்.பி கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

1989 பெப்ரவரி 8ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்ததொரு தினத்தில் ஸ்ரீ தலதா மாளிகையின் பாதுகாவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. என்றாலும் அந்த தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பறிக்கப்பட்ட ஆயுதங்கள் இடம்பெற்ற உடல் மற்றும் ஏனைய பெளதீக சேதங்கள் ஆகியன தொடர்பான எந்த தகவலும் இல்லை.

அதேபோன்று மேற்படி தாக்குதலுடன் தொடர்புடைய மக்கள் விடுதலை முன்னணியுடன் அல்லது அதன் ஆயுதக்குழுவாகிய தேசப்பற்றுடைய மக்கள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என பொலிஸ் விசாரணைகளின் அடிப்படையில் கண்டறியப்பட்டுள்ளதா என்பது தொடர்பிலும் தகவல் இல்லை.

அத்துடன் ஸ்ரீ தலதா மாளிகை மீதான தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்ட சந்தேக நபர்கள், அந்த தாக்குதலை திட்டமிட  ஒத்துழைப்பு வழங்கிய, அங்கு வன்முறை ஏற்பட காரணமானவர்கள் என 9 பெண்கள் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அது தொடர்பான தகவல் மாத்திரம் இருக்கிறது.

ஆனால் அவர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடர்பில் எந்த தகவலும் இல்லை. அத்துடன் இந்த சம்பவம் இடம்பெற்று  36 வருடங்கள் கடந்துள்ளதால், இது தொடர்பான சரியான தகவல்களை வழங்க முடியாமல் இருக்கிறது என்றார்.

அதனைத் தொடர்ந்து, இடைக்கேள்வியை முன்வைத்து  ரோஹினி குமாரி எம்.பி. குறிப்பிடுகையில், கண்டி தலதா மாளிகை, வாவிக்கருகில் மூடப்பட்டிருக்கும் இந்த பாதை, தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கிறது. அதற்கு மாற்று வீதி யோசனை ஒன்று இருந்தது. அது தற்போது செயற்படுகிறதா என கேட்டபோது, அதற்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

அதன் பின்னர் இரண்டாவது இடைக்கேள்வியை தயாசிறி எம்.பி. கேட்பதாக தெரிவிக்கப்பட்டபோது, தயாசிறி எம்.பி. கேள்வியை முன்வைக்கும்போது, தலதா மாளிகை தாக்குதல் இடம்பெற்று 36 வருடங்களாயுள்ளதால் தகவல் இல்லை என அமைச்சர் தெரிவித்தார். ஆனால், தலதா மாளிகையின் பாதுகாப்பு அரண் மீது தாக்குதல் நடத்தி 17 துப்பாக்கிகள் கடத்திச் செல்லப்பட்டுள்ளன. அதேபோன்று இன்னும் பல தகவல்கள் இருக்கின்றன. அதனால் இந்த தகவல்களை தேடிப் பார்த்து, அதனை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

அதற்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்  பதிவளிக்கையில், இந்த சம்பவம் தொடர்பில் தகவல்கள் இல்லை என பொலிஸார் தெரிவித்தனர். அதனையே நான் தற்போது தெளிவாக தெரிவித்தேன் என்றார்.