தேசபந்து தென்னக்கோன் மீதான குற்றச்சாட்டுக்கள்- சபாநாயகர் விளக்கம்

75 0

தேசபந்து தென்னக்கோன் மீதான குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் விசாரணைக் குழுவின் அறிக்கை தொடர்பில் எடுக்கக்கூடிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (23) பாராளுமன்றத்தில் விளக்கமளித்தார்.

2025 ஜூலை 22ஆம் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட, 2002ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கை முறை) சட்டத்தின் 3 (ஈ) மற்றும் 3 (உ) பிரிவுகளுக்கமைய பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனினால் மேற்கொள்ளப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட தவறான நடத்தைகள் மற்றும் பதவிக்கான அதிகாரத்தை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக அந்தச் சட்டமூலத்தின் 5ஆம் பிரிவுக்கு அமைய நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை தொடர்பில் எடுக்கக்கூடிய எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் சபாநாயகர் அறிவித்தல் மூலம் விளக்கமளித்தார்.

அதற்கமைய, நேற்று (22) சபையில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையின் மென் பிரதி ஆங்கில மொழியில் நேற்றைய தினமே பாராளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், அத்துடன், நேற்று  சபையில் பெற்றுக்கொண்ட அனுமதிக்கு அமைய அந்த அறிக்கையை அச்சிட்டதன் பின்னர்  சபையின் உறுப்பினர்களின் பரிசீலனைக்காக விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

குறித்த அறிக்கைக்கு அமைய,  தேசபந்து தென்னக்கோன் குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டுள்ளதால், 2002ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டத்தின் 17ஆம் பிரிவுக்கு அமைய அவரை பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானமொன்றை பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சபாநாயகர் அறிவித்தார்.

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 27இன் பிரகாரம் பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டு 5 முழு நாட்களின் பின்னர் இந்த தீர்மானம் பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் சேர்க்கப்படுவதுடன், அது தொடர்பில் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவினால் தீர்மானிக்கப்படும் தினமொன்றில் அதனை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியும் எனவும், பாராளுமன்ற (சமுகமளிக்காதோர் உட்பட) முழு உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் சார்பாக வாக்களித்தால், அச்சட்டத்தின் 18ஆம் பிரிவுக்கு அமைய தேசபந்து தென்னக்கோனை உடனடியாக பதவியிலிருந்து அகற்றுவதற்கு ஜனாபதிக்கு அறிவிப்பதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.

“தேசிய கணக்காய்வு (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட மனு 

அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் “தேசிய கணக்காய்வு (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மனு ஒன்றின் பிரதி தனக்குக் கிடைத்துள்ளதாகவும் சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.