மலையக மக்களில் வீடு வசதியற்ற நான்காயிரத்து 700 குடும்பங்களுக்கு வீடு கட்டிக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய அரசின் உதவியுடன் நிர்மாணிக்க இருக்கும் இந்த விட்டுத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சர் சமன்த வித்தியாரத்ன தெரிவித்தார்.
பெருந்தோட்ட அமைச்சில் ஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
மலையக பெருந்தோட்ட மக்கள் கடந்த 200 வருடங்களாக எதிர்கொண்டு வரும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஹட்டன் பிரகடனத்தின்போது தெரிவித்திருந்தார். குறிப்பாக அந்த மக்களுக்கு என தனியான வீடு, காணி, முகவரி இல்லாத குறைபாட்டுக்கு எமது அரசாங்க காலத்தில் தீர்வுகாண நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அதன் பிரகாரம் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் 4700 குடும்பங்களுக்கு பூரண வீட்டுடன் காணி உரிமை வழங்க திட்டமிட்டிருக்கிறோம்.
இதற்காக இந்தியாவினால் ஒரு வீட்டு்க்கு 28 இலட்சம் ரூபா நன்கொடையாக கிடைக்கிறது. அதற்கு மேலதிகமாக அந்த வீட்டுக்கான அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க இலங்கை மக்களின் வரி பணத்தில் 4இலட்சம் ரூபா நாங்கள் சேர்க்கிறோம். அதன் பிரகாரம் ஒரு வீட்டுக்கு 32 இலட்சம் ரூபா நாங்கள் ஒதுக்குகிறோம். அத்துடன் 10பேச் காணி வழங்குகிறோம்.
இதற்கு முன்னர் மலையகத்தில் வீடுகளை வழங்கும்போது அரசியல் தலையீடுகளுடன், அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கே வழங்கப்பட்டன, அதனால் வீடு தேவையுடய பலருக்கும் வீடுகள் கிடைக்கவில்லை. அதனால் தற்போது அமைக்கப்படும் 4700 வீடுகளை, பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்களில் இதற்கான அனுமதியை பெற்றுக்கொண்டு, தகுதியுடைய குடும்பங்கள் தெரிவு செய்யப்படுவார்கள். அதேநேரம் இந்த வீடுகளை வழங்குவதில், மணிசரிவு இடம்பெறும் அபாயமுல்ல லயன்களில் வாழ்பவர்களை அதில் இருந்து நீக்கி, அவர்களுக்கு முன்னுரிமை வழங்க திட்டமிட்டிருக்கிறோம். அடுத்த மாதம் இந்த வீட்டுத்திட்டத்தை ஆரம்பிக்க இருக்கிறோம்.
மேலும் 2023இல் கபரலிய பிரதேசத்தில் இடம்பெற்ற மணிசரிவில் பாதிக்கப்பட்ட மக்களை தற்காலிகமாக அங்கிருந்த மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். அந்த மக்கள் இன்னும் அந்த தொழிற்சாலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். அதனால் அவர்களை மீள்குடியேற்ற வீட்டுத்திட்டம் ஒன்றை நாங்கள் ஆரம்பித்திருக்கிறோம். இதுவரை 50 வீடுகளை அவசரமாக கட்டி முடித்திருக்கிறோம். இராணுவத்தினரே அங்கு பணியாற்றி வருகின்றனர். செப்டம்பர் மாதமளவில் அந்த வீடுகளை மக்களுக்கு கையளிக்க எதிர்பார்க்கிறோம் என்றார்.

