மனநிலையை மாற்றக்கூடிய மருந்துகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள பயிற்சித்திட்டம் !

72 0

தெற்காசியாவிலேயே செயற்கையாகத் தயாரிக்கப்படும் போதைப்பொருட்கள் மற்றும் மன நிலையை மாற்றக்கூடிய புதிய வகை மருந்துகளால் உருவாகும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான திறன்களை மேம்படுத்தும் நோக்கில், இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை (NDDCB) இணைந்து இரண்டு வாரகால பிராந்திய பயிற்சி திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

பயிற்சியானது போதைப்பொருட்களைப் பரிசோதிக்கும் உபகரணத்தை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் வைபவத்துடன் நிறைவடைந்தது.

இதன்போது, தூதரகத்தின் பிரதிப் பிரதானி ஜேன் ஹொவெல், பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான பிரதியமைச்சர் சுனில் வட்டகல மற்றும் NDDCB தலைவர் டாக்டர் இந்திக வன்னிநாயக்க ஆகியோர் இலங்கை அதிகாரிகளுக்கு ரேடியன் ASAP கருவியை வழங்கும் நிகழ்விற்குத் தலைமை தாங்கினர்.

தடயவியல் ஆய்வக திறன்களை மேம்படுத்துவதற்காக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் நிதியுதவியுடன் நடைபெறும் பிராந்திய முன்முயற்சியின் ஒரு பகுதியாக, சர்வதேச போதைப்பொருட்கள் மற்றும் சட்ட அமுலாக்க விவகாரகங்கள் பணியகம் (INL), தெற்காசியா முழுவதும் செயற்கை போதைப்பொருட்களைக் கண்டறியும் நடவடிக்கைகளை பலப்படுத்துவதற்காக கொழும்பு திட்டத்துடன் (Colombo Plan) ஒன்றிணைந்துள்ளது.

இலங்கை, மாலைதீவு, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தடயவியல் தொழில் வல்லுநர்கள், தமது தேசிய ஆய்வகங்களில் மேம்படுத்தப்பட்ட போதைப்பொருள் கண்டறியும் உபகரணங்களை நிறுவுவதற்குத் தயாராவதற்காக கொழும்பில் இடம்பெற்ற இரண்டு வாரகால தீவிர வகுப்பறை மற்றும் செய்முறைப் பயிற்சியில் பங்கேற்றனர்.

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு ரேடியன் ASAP போதைப்பொருள் பரிசோதனை இயந்திரம் வழங்கப்படும். இது ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்திற்குள் செயற்கையான போதை வஸ்த்துக்களை விரைவாகவும், அதிக நம்பிக்கையுடனும் பரிசோதிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறிய, அதிநவீன இயந்திரமாகும். பரிசோதனைக்கான மாதிரிகளை தயார் செய்யும் சிக்கலான நடைமுறைகள் தேவையற்ற இத்தொழில்நுட்பமானது வளர்ந்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தல்களை திறம்பட கண்டறிந்து பிராந்திய தடயவியல் திறன்களை வலுப்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமானதாகும்.

ஃபெண்டானிலின் உலகளாவிய பரவலை எதிர்த்துப் போராடுவதற்காக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட வெள்ளை மாளிகையின் நிறைவேற்று நடவடிக்கைகளை பிரதிபலிக்கும் இம்முன்முயற்சியானது, உலகளாவிய செயற்கை ஓபியொய்ட்களின் விநியோகச் சங்கிலிகளை சீர்குலைப்பதற்கான அமெரிக்காவின் பரந்த முன்முயற்சிகளுடன் ஒத்திசைகிறது. அமெரிக்காவில், இப்போதைவஸ்த்துக்கள் ஒரு தேசிய அவசரநிலையாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றைத் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் முன்னோடி இரசாயனங்கள் கிடைப்பதைத் தடுப்பதிலும் சட்டவிரோத உற்பத்தியாளர்களை பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

போதைப்பொருட்களைப் பரிசோதிக்கும் உபகரணத்தை கையளிப்பதற்காக இடம்பெற்ற இவ்வைபவத்தில் கருத்துரைத்த அமெரிக்கத் தூதரகத்தின் பிரதிப் பிரதானியான ஜேன் ஹொவெல்:

“போதை வஸ்து அச்சுறுத்தலுக்கு எல்லைகள் இல்லையென்பதால் ஃபெண்டானில் நெருக்கடியை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அமெரிக்கா எதிர்கொள்கிறது.  அதனால்தான், செயற்கையான போதை வஸ்த்துக்கள் வேரூன்றுவதற்கு முன்பே அவற்றைத் தடுப்பதற்காக, இது போன்ற பிராந்திய பங்காண்மைகளில் நாங்கள் முதலீடு செய்கிறோம். இம்முன்முயற்சியின் ஊடாக, மேம்பட்ட கருவிகளையும் பயிற்சியினையும் பகிர்ந்து கொள்வது மட்டுமல்லாமல், பொதுச் சுகாதாரம் மற்றும் பிராந்திய பாதுகாப்பிற்கான ஒரு பொதுவான உறுதிப்பாட்டையும் நாங்கள் வலுப்படுத்துகிறோம். உலகளாவிய செயற்கை ஓபியொய்ட் விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்து, இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதுமுள்ள சமூகங்களைப் பாதுகாப்பதற்காக அமெரிக்கா மேற்கொள்ளும் பரந்த முயற்சிகளை இந்தப் பணி பிரதிபலிக்கிறது.” எனக் குறிப்பிட்டார்.

மாலைதீவு, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலுள்ள ஆய்வகங்களுக்கும் உபகரணங்களை நன்கொடையாக வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் திறன்களை வளர்த்தல் ஆகியவற்றின் மூலம் செயற்கையான போதை வஸ்த்துக்களின் பரிமாற்றங்களை கண்டறிவதற்கும் அவற்றை சீர்குலைப்பதற்குமான இப்பிராந்தியத்தின் திறனை பலப்படுத்துவதற்கு அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது.